கந்தக்காடு முகாமிலிருந்து தப்பியோடியவர்கள் தொடர்பில் தற்போது வெளியாகியுள்ள புதிய தகவல்!
கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலின் போது முகாமிலிருந்து தப்பிச் சென்றவர்களில் 232 பேர் மீண்டும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த அறிவித்தலை புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
கந்தக்காடு புனர்வாழ்வு முகாமில் நேற்றிரவு இடம்பெற்ற மோதலின் போது, புனர்வாழ்வு பெற்று வந்த 500க்கும் மேற்பட்டோர் வேலிகளை உடைத்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.
மேற்படி மோதல் சம்பவத்தின் போது, புனர்வாழ்வளிக்கப்பட்டு வந்த கைதி ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளார்.
அது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக வெலிகந்த காவல்துறை உத்தியோகத்தர்கள் குழுவொன்று புனர்வாழ்வு நிலையத்துக்கு சென்றிருந்த போதே இவர்கள் தப்பிச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
இவ்வாறு வன்முறையாக நடந்து கொண்ட நபர்களால், புனர்வாழ்வு மையத்தின் முள்வேலிகள் உடைக்கப்பட்டுள்ளன. சம்பவம் நடந்தபோது, தப்பியோடிய 500க்கும் மேற்பட்டோர் புனர்வாழ்வு மையத்தில் புனர்வாழ்வளிக்கப்பட்டு வந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தப்பியோடியவர்களைக் கண்டுபிடிக்க இராணுவமும் காவல்துறையினரும் இணைந்து தொடர்ந்தும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
