தனியார் துறையினருக்கு சிறிலங்கா அரசாங்கம் விடுத்துள்ள மகிழ்ச்சித் தகவல்!
அரச துறையினருக்கு வழங்கப்பட்டுள்ள 5 ஆயிரம் ரூபாய் மாதந்த கொடுப்பனவை தனியார் துறை ஊழியர்களுக்கும் பெற்றுக்கொடுக்கும் பொறுப்பை அரசாங்கம் ஏற்றுள்ளது என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் அரச தலைவரின் சிம்மாசன உரை தொடர்பான விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனை கூறியுள்ளார்.
பண வீக்கம் காரணமாக மக்களுக்கு மிகப் பெரிய பிரச்சினை ஏற்பட்டுள்ளது என்பது உண்மை. இதன் காரணமாகவே அரச துறையினர், அரச சபைகள், கூட்டுத்தாபனங்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோருக்கு கொடுப்பனவை வழங்க அரசாங்கம் முடிவு செய்தது.
இது குறித்து எவரும் குழப்பமடைய தேவையில்லை. தனியார் துறையினருக்கு இந்த கொடுப்பனவை பெற்றுக்கொடுக்கும் பொறுப்பை அரசாங்கம் ஏற்றுள்ளது எனவும் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.
கடுமையான வாழ்க்கை செலவுகள் அதிகரித்துள்ள நிலையில், அரச துறையினருக்கு 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு வழங்கப்படுவது போல், தனியார் துறையினருக்கும் வழங்குமாறு தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
தொழில் அமைச்சர் இது சம்பந்தமாக முதலாளிமார் சங்கத்துடன் சில சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்திய போதிலும் இணக்கப்பாட்டுக்கு வர முடியவில்லை.
இந்த பின்னணியிலேயே அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தனியார் துறையினருக்கு இவ்வாறான செய்தியை வழங்கியுள்ளார்.
