தொடர்ச்சியான கைதுகள்..! அரசாங்கத்திற்கு எதிரான குரல்களை அடக்குவதற்கு முயற்சி: வெளியாகிய எச்சரிக்கை
கைதுகள்
போராட்டக்காரர்கள் மற்றும் போராட்ட ஒருங்கிணைப்பாளர்களின் தொடர்ச்சியான கைதுகள் மூலம் அரசாங்கத்திற்கு எதிரான குரல்களை அடக்குவதற்கு மேற்கொள்ளப்படும் தொடர் முயற்சிகள் மிகுந்த எச்சரிக்கையைத் தோற்றுவித்திருப்பதாக சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.
மேலும் பொது இடங்களில் அமைதியான முறையில் ஒன்றுகூடுவதற்கு மக்கள் கொண்டிருக்கும் உரிமைக்கு இலங்கை அரசாங்கம் மதிப்பளிக்கவேண்டும் என்பதுடன் அமைதிவழிப்போராட்டக்காரர்களைக் கலைப்பதற்கு அடக்குமுறை உத்திகளையோ அல்லது படையினரையோ பயன்படுத்துவதைத் தவிர்க்கவேண்டும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.
குறிப்பாக பொருளாதார நெருக்கடி தொடர்பில் பொறுப்புக்கூறுவதுடன் அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டுமென வலியுறுத்தி கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து 100 நாட்களுக்கும் அதிகமான காலம் அமைதியான முறையில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுவந்த கொழும்பு, 'கோட்டா கோ கம' ஆர்ப்பாட்டப்பகுதியிலிருந்து போராட்டக்காரர்களை வெளியேறுமாறு காவல்துறையினர் வெளியிட்டுள்ள அறிவிப்பு தொடர்பில் நாம் கரிசனை கொண்டிருக்கின்றோம் எனவும் தெரிவித்துள்ளது.
குற்றச்சாட்டுக்களை முழுமையாக நீக்கிக்கொள்ளுமாறு வலியுறுத்தல்
போராட்டக்காரர்கள் மற்றும் போராட்ட ஒருங்கிணைப்பாளர்களின் தொடர்ச்சியான கைதுகள் மூலம் அரசாங்கத்திற்கு எதிரான குரல்களை அடக்குவதற்கு மேற்கொள்ளப்படும் தீவிரமான தொடர் முயற்சிகள் மிகுந்த எச்சரிக்கையைத் தோற்றுவித்துள்ளன.
எனவே உரிமைகள் மீது மட்டுப்பாடுகளைப் பிரயோகிக்கவேண்டிய அவசியத்தேவை எதுவும் இல்லாத நிலையில், அமைதியான முறையில் ஒன்றுகூடுவதற்கான தமது உரிமையைப் பயன்படுத்தியமைக்காகத் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் போராட்டக்காரர்கள் அனைவரையும் விடுவிப்பதுடன் அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை முழுமையாக நீக்கிக்கொள்ளுமாறு உரிய அதிகாரிகளிடம் வலியுறுத்துகின்றோம்.
சுதந்திரத்திற்கு மதிப்பளிப்பு
மாறாகக் குற்றமிழைத்தமைக்கான ஆதாரம் காணப்படும் பட்சத்தில், அக்குற்றத்தின் தன்மை குறித்து உரியவாறு மதிப்பீடு செய்ததன் பின்னர் சர்வதேச நியமங்களுக்கும் உரிய சட்டங்களுக்கும் அமைவாக வழக்குப்பதிவு செய்யப்படவேண்டும்.
இலங்கை அரசாங்கம் கருத்து வெளிப்பாடு மற்றும் அமைதியான முறையில் ஒன்றுகூடுதல் ஆகியவற்றுக்கான சுதந்திரத்திற்கு மதிப்பளிப்பதுடன் அவற்றைப் பாதுகாப்பது இன்றியமையாததாகும்.
மாறாக இந்த உரிமைகளின் மீதான எந்தவொரு மட்டுப்பாடும் அத்தியாவசியமானதாகும் பொருத்தமானதாகவும் சட்டத்திற்கு அமைவானதாகவும் காணப்படவேண்டியது அவசியம் என்று சர்வதேச மன்னிப்புச்சபை வலியுறுத்தியுள்ளது.