இரவோடிரவாக நடாத்தப்படும் தாக்குதல்களுக்கு அஞ்சப்போவதில்லை! காலி முகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்கள் அதிரடி
நள்ளிரவு தாக்குல்
22 ஆம் திகதி வெள்ளிக்கிழமை சிறிலங்கா அதிபர் செயலகத்தை முற்றுகையிட்ட முப்படையினர் கோட்டா கோ கம போராட்டக்காரர்களை அங்கிருந்து விரட்டியடித்துள்ளனர்.
இவ்வாறு அங்கிருந்த போராட்டக்காரர்கள் கலைக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த பகுதி முற்றுமுழுதாக முப்படையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் நேற்றைய தினம் காலிமுகத்திடல் 'கோட்டா கோ கம' வெறிச்சோடிய நிலையில் காணப்பட்டதுடன், சிறிலங்கா அதிபர் செயலகத்தை அண்மித்த பகுதியில் தொடர்ந்தும் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டிருந்தது.
இருப்பினும் இரவோடிரவாக நடாத்தப்படும் தாக்குதல்களுக்குத் தாம் அஞ்சப்போவதில்லை என்று அப்பகுதியிலிருந்த போராட்டக்காரர்கள் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்தப் போராட்டத்தில் எவ்வகையான இடைவெளியோ அல்லது தடங்கலோ ஏற்பட்டாலும் தமது இலக்கை அடையும் வரை போராட்டம் தொடரும் என்றும் தெரிவித்துள்ளனர்.
100 நாட்களுக்கும் மேலாக முன்னெடுத்துவந்த தன்னெழுச்சிப் போராட்டம்
தீவிர பொருளாதார நெருக்கடியை அடுத்து நாட்டு மக்கள் ஒன்றிணைந்து சுமார் 100 நாட்களுக்கும் மேலாக முன்னெடுத்துவந்த தன்னெழுச்சிப்போராட்ட இடமான கொழும்பு, காலிமுகத்திடல் 'கோட்டா கோ கம' நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை அதிகாலை பெருமளவான காவல்துறையினர் , முப்படையினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் அடங்கிய குழுவினரால் சுற்றிவளைக்கப்பட்டதுடன், அங்கிருந்த போராட்டக்காரர்கள்மீதும் சட்டத்தரணிகள் மற்றும் ஊடகவியலாளர்கள்மீதும் மிலேச்சத்தனமான தாக்குதல் நடாத்தப்பட்டு, கூடாரங்கள் அகற்றப்பட்டதுடன் அதிபர் செயலகமும் படையினரால் கைப்பற்றப்பட்டது.
சிறிலங்கா அதிபர் செயலகத்தில் இருந்து வெளியேறுவதுடன் காலிமுகத்திடல் 'கோட்டா கோ கம' போராட்டக்களத்தைக் கலைப்பதற்கான உத்தியோகபூர்வ அறிவிப்பை வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு வெளியிடுவதற்குப் போராட்டக்காரர்கள் ஏற்கனவே தீர்மானித்திருந்த நிலையில், நாட்டின் 8 ஆவது அதிபராக ரணில் விக்ரமசிங்க பதவிப்பிரமாணம் மேற்கொண்டு 24 மணிநேரம் கூட முடிவடைந்திருக்காத பின்னணியில படையினரின் இரும்புக்கரங்கொண்டு மக்களின் போராட்டம் அடக்கப்பட்டமை சர்வதேச ரீதியில் பாரிய அதிர்வலைகளைத் தோற்றுவித்திருந்தது.
பாதுகாப்புப் பணிகளில் இராணுவத்தினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர்
சிறிலங்கா அதிபர் செயலகத்திற்குச் செல்லக்கூடிய அனைத்து வீதிகளும் பாதுகாப்புப்படையினரால் முடக்கப்பட்டதுடன் ஊடகவியலாளர்களுக்கும் அப்பகுதிக்குள் பிரவேசிப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. இவ்வாறானதொரு பின்னணியில் நேற்று சனிக்கிழமையும் சிறிலங்கா அதிபர் செயலகத்தைச்சூழ பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டிருந்தது.
குறிப்பாக அப்பகுதிக்குள் நுழைய முடியாதவாறு மறியல்கள் இடப்பட்டு காவல்துறையினர் , இராணுவத்தினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் உள்ளிட்டோர் பாதுகாப்புப்பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இரவோடிரவாக நடாத்தப்படும் தாக்குதல்களுக்கு அஞ்சப்போவதில்லை
நேற்றைய தினம் காலிமுகத்திடல், 'கோட்டா கோ கம' வெறிச்சோடிய நிலையில் காணப்பட்டதுடன் அங்கிருந்த கூடாரங்களில் குறைந்த அளவிலேயே காணக்கூடியதாக இருந்தது.
இருப்பினும் இரவோடிரவாக நடாத்தப்படும் தாக்குதல்களுக்குத் தாம் அஞ்சப்போவதில்லை என்றும், இந்தப் போராட்டத்தில் இடைவெளியோ அல்லது தடங்கலோ ஏற்பட்டாலும் தமது இலக்கை அடையும்வரை போராட்டம் தொடரும் என்றும் அங்கிருந்த போராட்டக்காரர்கள் சிலர் ஊடகங்களுக்கு இவ்வாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.