குழந்தைகளை துன்புறுத்திய காவல்துறையினர்..! ஜோசப் ஸ்டாலின் முறைப்பாடு
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.
நேற்று (09) காலிமுகத்திடலில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது காவல்துறையினரால் சிறு குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் அச்சுறுத்தி துன்புறுத்தியதாக தெரிவித்தே இவ்வாறு முறைப்பாடு செய்துள்ளார்.
இது தொடர்பில் விரைவானதும், விரிவானதுமான விசாரணையொன்றை மேற்கொள்ளுமாறும் ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் அந்த முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.
மீண்டும் காலிமுகத்திடலில் வெடித்த போராட்டம்
கொழும்பு - காலி முகத்திடலில் நேற்றைய தினம் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில் அங்கு குழுமியிருந்த காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக அமைதியின்மை ஏற்பட்டது.
முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவிற்கும் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராகவும் காலி முகத்திடலில் நடத்தப்பட்ட போராட்டம் மற்றும் அரசுக்கெதிரான எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு உயிர்நீத்தவர்களை நினைவுகூரும் பொருட்டும், அநீதிகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும் அமைதியான முறையில் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.
இதன்போது பெருமளவான காவல்துறையினர் மற்றும் அதிரடிப்படையினர் ஆகியோர் களத்தில் குவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
