பல்கலைக்கழக மாணவர்களை மீண்டும் விரட்டியடித்த காவல்துறை!
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டப் பேரணியை கலைக்க காவல்துறையினர் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
பத்தரமுல்லை - தியத்தன உயன பகுதியில் பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்த ஆர்ப்பாட்டம் மீதே சற்று முன்னர் காவல்துறை நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகத்தை மேற்கொண்டுள்ளது.
அரசாங்கத்தை பதவி விலகுமாறு கோரி, அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
மாணவர்கள் காவல்துறையினரின் வீதித் தடையினை மீறி நாடாளுமன்ற வளாகத்திற்கு செல்ல முற்பட்ட போது, காவல்துறையினரால் நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்திற்கு அருகாமையில் போராட்டக்காரர்களுக்கு வழங்கப்பட்ட உணவுப் பொருட்கள், போராட்டக்காரர்களைக் கலைக்க காவல்துறையினர் மேற்கொண்ட கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகத்தால் வீணடிக்கப்பட்டுள்ளது.
இதனால் அந்த பகுதியில் தற்போது அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
அனைத்து பல்கலைக்கழக மாணவர் சம்மேளனம் நேற்றைய தினம் பேரணியாக நாடாளுமன்ற நுழைவாயிலை வந்தடைந்த நிலையில் காவல்துறை வீதித் தடையை அகற்ற முற்பட்ட போது காவல்துறையினர் கண்ணீர்ப்புகை தாக்குதலை மேற்கொண்டு ஆர்ப்பாட்டக்காரர்களை கலைத்தனர்.
அதன் பின்னர் குறித்த இடத்தில் கொட்டகை அமைந்து மாணவர்கள் தொடர்ந்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் மீண்டும் இன்றைய தினம் அவர்கள் மீது காவல்துறையினர் கண்ணீர்ப்புகைத் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.



