அதிகாரத்தை பயன்படுத்தி மக்கள் மீது கொடூர தாக்குதல்! வெளியாகிய கண்டனம்
ஜனநாயக முறையில் போராட்டம்
அதிகாரத்தை பயன்படுத்தி மக்கள் போராட்டத்தை அடக்குவதையும் போராட்டத்தில் ஈடுபடும் மக்களை தாக்குவதையும் இலங்கை அரசாங்க ஆசிரியர்கள் சங்கம் வன்மையாக கண்டிக்கின்றது என இலங்கை அரசாங்க ஆசிரியர்களின் சங்கத்தின் உபதலைவர் ஜீவராசா ருபேஷன் தெரிவித்துள்ளார்.
எமது நாட்டில் இன்றைய காலகட்டத்தில் மக்கள் நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து ஜனநாயக முறையில் போராட்டங்களை முன்னெடுத்துச் செல்கின்றனர்.
இந்த போராட்டங்களுக்கு செவி சாய்ப்பது ஆட்சியாளர்களின் கடமையாகும். எனினும் ஜனநாயக போராட்டத்தில் ஈடுபட்டிருந்த காலி முகத்திடல் போராட்டக்காரர்கள் இரவு வேளையில் இராணுவத்தினராலும் காவல்துறையினராலும் தாக்கப்பட்டதோடு பலர் கைது செய்யப்பட்டுமுள்ளனர்.
மக்களின் விருப்பு இன்றி தேர்வு செய்யப்பட்ட ஒரு அதிபராக ரணில்
இது எமது நாட்டின் சட்ட யாப்பிற்கும் மனித உரிமைக்கும் முரணான ஒரு செயற்பாடாகும். மக்களின் விருப்பு இன்றி தேர்வு செய்யப்பட்ட ஒரு அதிபராக ரணில் விக்ரமசிங்க அவர்கள் காணப்படுகின்றார்.
இதே சமயத்தில் சாதாரண மக்கள் போராட்டத்திற்கு செவி சாய்க்காது அவர்களை மிலேச்சத்தனமாக தாக்குதல் , கைது செய்தல் , ஊடகவியலாளர்களை தாக்குதல், அவர்களை கைது செய்தல் என்பன ஜனநாயக நாட்டிற்கு மிகவும் ஒரு பொருத்தமற்ற செயற்பாடாகும்.
எனவே மனித உரிமை ஆணைக்குழு மற்றும் இலங்கை நீதித்துறையில் இருக்கின்றவர்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் அனைவரும் ஒன்றிணைந்து மக்களுக்கு சரியான மனித உரிமையை நாட்டில் அனுபவிப்பதற்கான ஒரு சூழலை ஏற்படுத்த முன்வர வேண்டும். என இலங்கை அரசாங்க ஆசிரியர்களின் சங்கத்தின் உப தலைவர் ஜீவராசா ருபேஷன் தெரிவித்துள்ளார்.

