பல நூற்றாண்டுகளுக்கும் மேற்பட்ட புராதான சொத்துக்கள் திருட்டு- அறிவிக்கப்பட்டது இலட்சக்கணக்கான சன்மானம்!
ரம்புக்கனை – கொட்டவெஹர ரஜமஹா விகாரையில் வைக்கப்பட்டிருந்த தங்கம் மற்றும் பளிங்கினாலான தொல்பொருட்கள் திருட்டப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனையடுத்து சம்பவம் தொடர்பில் தகவல்களை வழங்கும் நபருக்கு 25 இலட்சம் ரூபா பணப்பரிசு வழங்கப்படும் என காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
தங்கம் மற்றும் வெண்கல கலசங்கள், ஊதா மற்றும் வெள்ளை படிக பெட்டிகள் இரண்டு, நினைவுச்சின்னங்களைக் கொண்ட ஒரு பளிங்கு பெட்டி, தங்க சுவடுகள் ஐந்து, பெட்டியிலுள்ள ஒரு கலசம் ஆகியவை இம்மாதம் 11ஆம் திகதி இரவு திருடப்பட்டுள்ளன.
இவை திருடப்பட்டு இன்றோடு ஐந்து நாட்கள் கடந்துள்ளன. இது தொடர்பாக மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையிலேயே வரலாற்று சிறப்புமிக்க ரம்புக்கனை விஹாரையில் தங்க கலசம் உட்பட ஒன்பது பெட்டிகள் திருடப்பட்டுள்ளமை தொடர்பில் சரியான தகவலை வழங்குபவருக்கு 10 இலட்சம் ரூபா பணப்பரிசு வழங்கப்படும் என விகாரையின் பிரதமகுரு புஸ்ஸல்லா ஆரியவன்ச தேரர் நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து பொது மக்களுக்கு அறிவித்துள்ளார்.
ஆனால் இது தொடர்பாக எந்தவித தகவலும் இன்னும் கிடைக்கவில்லை. இவை அனைத்தும் விலைமதிப்பு மிக்கவையாகும். 2300 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த சொத்துக்களாகும்.
இது தொடர்பில் யாராவது தகவல் தெரிந்தால், குற்றப் புலனாய்வுப் பிரிவின் தலைமைப் பரிசோதகர் ஜயசேகரவை 071 5894924 அல்லது 070 2542162 என்ற இலக்கத்திற்கு அழைக்கவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அல்லது தேரரின் 071 6920275 என்ற தொலை பேசி இலக்கத்துக்கும் தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் தகவல்களை வழங்குபவர்களின் ரகசியத்தன்மை பாதுகாக்கப்படும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
