சீனாவிடம் இலங்கை விடுத்துள்ள முக்கிய கோரிக்கை -வெளிப்படுத்திய சர்வதேச ஊடகம்
இலங்கை தனது கடன் தவணைகளை ஒத்திவைக்குமாறு சீனாவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தி கார்டியன் செய்தி வெளியிட்டுள்ளது.
அந்நிய செலாவணி கையிருப்பு குறைவதால் இலங்கை தற்போது கடும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாகவும் அந்த பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மின்சாரம் அவ்வப்போது துண்டிக்கப்படுவதாகவும், அத்தியாவசியப் பொருட்களுக்காக நாடு முழுவதும் நீண்ட வரிசைகள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் தற்போதைய கடனை மறுசீரமைக்க சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை அரசாங்கம் கோரியுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்தியாவசியப் பொருட்களின் இறக்குமதிக்கு நிதியளிப்பதற்கான அந்நியச் செலாவணி கையிருப்பு பற்றாக்குறையால் உணவு, மருந்து, எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விநியோகம் குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காகிதாதிகளின் இறக்குமதியில் டொலர்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் இலட்சக்கணக்கான மாணவர்களுக்கு பரீட்சை வினாத்தாள்களை கூட அச்சிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.