பகிரங்கப்படுத்தப்பட்ட சிறிலங்கா தொடர்பான வரைபு - தமிழர் தரப்புக்கு ஏமாற்றம்
பகிரங்கப்படுத்தப்பட்ட வரைபு
ஐ.நா மனித உரிமை பேரவையில் சிறிலங்கா தொடர்பான தீர்மானங்களை கொண்டுவந்த அமெரிக்கா தலைமையிலான இணைத்தலைமை நாடுகள் இந்த முறை அமர்வில் சிறிலங்கா மீது கொண்டுவரவுள்ள புதிய தீர்மானத்தின் வரைவு வெளியாகியுள்ளது.
ஆறு பக்கங்களில் வெளியாகியுள்ள இந்தத் தீர்மானத்தில் சிறிலங்காவை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்துக்கு பரிந்துரைப்பதற்குரிய அழைப்பு விடுக்கப்படாமை தமிழர் தரப்புக்கு ஏமாற்றத்தை வழங்கியுள்ளது.
இந்த வரைவு தற்போது உறுப்பு நாடுகளின் சுழற்சிக்கு விடப்பட்டுள்ளது. சிறிலங்காவை ஐ.சீ.சீ எனப்படும் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்துக்கு பரிந்துரைக்க கோரும் தமிழர்களின் நீண்டகால கோரிக்கை உள்ளடக்கப்படாத வகையிலேயே இந்தப் புதிய வரைவு அறிக்கை வந்துள்ளது.
இதில் இலங்கையின் உள்ள பொறிமுறைகள் மீண்டும் வலுவூட்டப்பட வேண்டும் என்ற கோரிக்கை மட்டும் உள்ளடக்கப்பட்டுள்ளது.
புதிய காலக்கெடு
நேற்று மாலை பகிரங்கப்படுத்தப்பட்ட இந்த வரைவில் எதிர்கால போர்க்குற்ற விசாரணைகளில் பயன்படுத்தக்கூடிய தகவல்களை சேகரிப்பதற்கும், ஒருங்கிணைப்பதற்கும், அவற்றை பகுப்பாய்வு செய்வதற்கும் மற்றும் பாதுகாப்பதற்கும் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகம் உத்வேகப்படுத்தப்படவேண்டும் என்ற கோரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளமை முக்கிய விடயமாக நோக்கப்படுகிறது.
சிறிலங்கா தனது பொறுப்புக்கூறலை முன்னெடுப்பதற்குரிய புதிய காலக்கெடுவாக 2024 ஆண்டு செப்டம்பர் மாதத்தை இந்த வரைவு நிர்ணயித்துள்ளது.
எனினும் தற்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ள இந்த வரைவு மேலும் சில மாற்றங்களுக்கு உள்ளாக்கப்பட்ட பின்னரே இறுதி தீர்மானமாக வெளிவருவது குறிப்பிடத்தக்கது.

