கோட்டாபயவுக்கு எதிரான உதயங்க வீரதுங்கவின் கருத்துக்கள் - அடிவருடிகளுக்கு பயந்து நீக்கப்பட்ட காணொளி!
ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க, வலையொளி தளம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணல், அந்த வலையொளித் தளத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
அந்த காணொளியை நீக்குமாறு தன்னை நேர்காணல் எடுத்த ஊடகவியலாளரான சமுதித்த சமரவிக்ரமவுக்கு கடும் அழுத்தம் கொடுக்கப்பட்டதாக அவர் தன்னிடம் கூறினார் எனவும் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.
உதயங்க வீரதுங்க இந்த விடயம் சம்பந்தமாக தனது முகநூல் பக்கத்தில் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது,
நான் திடீரென விபத்துக்கு உள்ளானாலோ, என் வீட்டின் மீது தீயிட்டாலோ, நான் திடீரென கைது செய்யப்பட்டாலோ, வேறு ஏதேனும் மர்ம சம்பங்கள் நடந்தாலோ அல்லது வெள்ளை வான் அனுப்பி வைக்கப்பட்டாலோ, தலைவர் அறிந்தோ அறியாமலோ தனது அடிவருடிகளுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்கியுள்ளார் என்றே நான் புரிந்துக்கொள்வேன்.
எனது உயிர் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் ஒரு நடவடிக்கையாக இந்த அறிக்கையை வெளியிடுகிறேன் எனவும் உதயங்க வீரதுங்க கூறியுள்ளார்.
மேலும் யூ டியூப் வலையொளி தளத்திற்கு கடந்த 14 ஆம் திகதி வழங்கிய நேர்காணலில், பேருந்து ஒன்று தீவைக்கப்படும் போது அதனை தடுத்து நிறுத்த முடியாத நபர், நாட்டை எப்படி பாதுகாப்பார் என நாட்டின் அரச தலைவரிடம் கேள்வி எழுப்பி இருந்ததுடன் நாட்டு மக்களுக்கு ராஜபக்சவினரை வெறுக்க செய்தவர் கோட்டாபய என கூறியிருந்தேன்.
நான் இப்படி கூறியிருந்த காரணத்தினால், எனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என உணர்கின்றேன். நான் இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகளை அழைத்து வந்தேன் என்று அடிவருடிகள் கூறியதை கேட்டு, தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் என்னை சிறையில் அடைக்க போவதாக அச்சுறுத்திய கோட்டாபய தற்போது நான் கூறுவதை கேட்டு எனக்கு வெள்ளை வானை அனுப்பலாம்.
வெள்ளை வான் கலாசாரம் பற்றி உண்மையோ பொய்யோ அன்று ஊடகங்களில் பரவி இருந்தது. எனினும் அரச தலைவர் பதவியில் இருக்கும் கோட்டாபய அப்படியான செயலை செய்ய மாட்டார் என நம்புகிறேன் என நான் அந்த போட்டியில் கூறியிருந்தேன்.
அந்த காணொளி பதிவேற்றம் செய்யப்பட்டு 24 மணி நேரத்திற்கு முன்னர் 2 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பார்வையிட்டிருந்தனர். இந்த நிலையில் வழமைப் போல் கொடுக்கப்பட்ட அழுத்தத்தின் அடிப்படையிலும் மீண்டும் வன்முறை தாக்குதல் நடத்தப்படலாம் என்ற காரணத்தினாலும் சமுதித்த சமரவிக்ரம, அடிவருடிகளுக்கு பயந்து காணொளியை நீக்கியதாக என்னிடம் கூறினார்.
அதேவேளை இலங்கை மத்திய வங்கியின் நிதி புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் எனது அனைத்து வங்கிக் கணக்குகளையும் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் 85 மாதங்களாக தற்காலிகமாக முடக்கி வைத்துள்ளார்.
நான் சுமார் 35 ஆண்டுகள் வெளிநாடுகளில் இருந்தேன். எனது வங்கிக் கணக்குகளில் இருந்து நான் வெளிநாடுகளில் 35 ஆண்டுகளாக சம்பாதித்த அந்நிய செலாவணிகள். மத்திய வங்கியின் அனுமதியுடன் அந்த வங்கிக் கணக்குகளில் பணம் வைப்புச் செய்யப்பட்டது.
இலங்கை மத்திய வங்கி அன்றும் தற்போதும் மேற்கொள்ளும் அரசியல் வேட்டையாடல்களுக்கு ஒத்துழைப்பு வழங்கி நான் கொடுக்கல் வாங்கல் செய்யும் வங்கியும் அரசியல் பழிவாங்கலில் ஈடுபடுகிறது.
இதனால், தற்போதும் நாட்டில் நிலவும் இப்படியான சூழ்நிலையில், நீங்கள் வெளிநாடுகளில் சம்பாதிக்கும் பணத்தை இலங்கையில் உள்ள வங்கிகளில் வைப்புச் செய்து, என்னை போல் நல்லாட்சி அரசாங்கம் மற்றும் தற்போதைய அரசாங்கத்தின் அதிகாரிகள் மற்றும் அடிவருடிகளின் பொறிக்குள் சிக்கி விடாதீர்கள் எனவும் உதயங்க வீரதுங்க தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.