இலங்கையின் ஒன்பதாவது நாடாளுமன்றம் குறித்த சாராம்ச அறிக்கை!
இலங்கையின் ஒன்பதாவது நாடாளுமன்றம் கடந்த செப்டெம்பர் மாதம் கலைக்கப்பட்ட நிலையில் அதன் செயற்பாடுகள் குறித்த சாராம்ச அறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, இலங்கையின் ஒன்பதாவது நாடாளுமன்றத்தில் 19 உறுப்பினர்கள் வெற்றிடமானதுடன் , 4 முறை கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், 390 நாட்கள் அமர்வுகள் இடம்பெற்றதாகவும் நாடாளுமன்ற பொதுச் செயலாளர் செயலகம் தெரிவித்துள்ளது.
2020ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 20ஆம் திகதி முதல் கூட்டத்தொடர் ஆரம்பமாகி 2024 செப்டெம்பர் மாதம் 24ஆம் திகதி நள்ளிரவு கலைக்கப்பட்ட ஒன்பதாவது நாடாளுமன்றத்தில் காலப்பகுதியில், அரசியலமைப்பின் 66வது பிரிவின்படி, 19 நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகள் வெற்றிடமாகின.
பதவி விலகல்
இதன்படி, 18 சந்தர்ப்பங்களில் 16 நாடாளுமன்ற உறுப்பினர்கள் புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளதுடன், 241 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளனர்.
தேசிய பட்டியலிலிருந்து நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட ஜெயந்த கெட்டகொட, பதவி விலகியதையடுத்து, அவருக்கு பதிலாக பசில் ராஜபக்ச நியமிக்கப்பட்டார்.
அதன் பின்னர் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் நிவாட் கப்ரால் பதவி விலகியதையடுத்து அந்த வெற்றிடத்திற்கு மீண்டும் ஜெயந்த கெட்டகொட நியமிக்கப்பட்டார்.
இதேபோல், முஜிபுர் ரஹ்மான் பதவி விலகல் செய்ததால் வெற்றிடமான இடத்துக்கு, எச்.எம்.பௌசி தெரிவு செய்யப்பட்ட நிலையில், நீதிமன்றத் தீர்ப்பின்படி வெற்றிடமான டயானா கமகேவின் நாடாளுமன்ற ஆசனத்திற்கு முஜிபர் ரஹ்மான் மீண்டும் நியமிக்கப்பட்டார். ஆனால் ஹரின் பெர்னாண்டோவின் வெற்றிடத்திற்கு புதிய நாடாளுமன்ற உறுப்பினர் நியமிக்கப்படவில்லை.
ஒன்பதாவது நாடாளுமன்றம்
ஒன்பதாவது நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற மிகவும் தனித்துவமான நிகழ்வுகளில் ஒன்று நாட்டின் 7 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியான கோட்டாபய ராஜபக்சவின் பதவி விலகல் ஆகும்.
பின்னர் பாராளுமன்ற உறுப்பினர்களின் வாக்குகளால் ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickremesinghe) நாட்டின் 8வது நிறைவேற்று ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார். இதனால் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த ரணில் விக்ரமசிங்கவால் வெற்றிடமடைந்த நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு புதிய நாடாளுமன்ற உறுப்பினர் நியமனம் உட்பட 16 புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர்.
மேலும், 4 முறை நாடாளுமன்ற கூட்டத்தொடர்கள் ஒத்திவைக்கப்பட்டிருந்தன. இதில் முதல் இரண்டு கூட்டத்தொடர்கள் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் ஒத்திவைக்கப்பட்டிருந்தன. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மூன்றாவது மற்றும் நான்காவது கூட்டத்தொடர்களை ஒத்திவைத்திருந்தார்.
இதன்படி, ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் 5 அமர்வுகள் நடைபெற்றதுடன் முதலாவது கூட்டத்தொடர் 20.08.2020 முதல் 12.12.2021 வரையிலும், இரண்டாவது கூட்டத்தொடர் 18.01.2022 முதல் 28.07.2022 வரையிலும், மூன்றாவது கூட்டத்தொடர் 03.08.2022 முதல் 20201.20203 வரையிலும் நான்காவது கூட்டத்தொடர் 2023.02 08 முதல் 2024.01.26 வரையும் ஐந்தாவது கூட்டத்தொடர் 02.07.2024 முதல் 2024.09.24 அன்று நாடாளுமன்றம் கலைக்கப்படும் வரை நிலவியமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |