ஆறு மாதங்களில் இலங்கையின் அரச நிறுவனங்களுக்கு மில்லியன் கணக்கில் இலாபம்: வெளியான தகவல்
இலங்கையின் முக்கிய அரசுக்குச் சொந்தமான நிறுவனங்கள், 2026ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் மொத்தமாக 259.3 பில்லியன் ரூபாய் இலாபத்தைப் பதிவு செய்துள்ளதாக தெரியவருகிறது.
கடந்த 2025ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் 227.8 பில்லியன் ரூபாய் இலாபம் பதிவாகியிருந்த நிலையில், இவ்வாண்டு இலாபம் 13.8 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக நிதி அமைச்சின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலாபம் ஈட்டிய நிறுவனங்களின் பட்டியலில் இலங்கை வங்கி முதலிடத்தில் உள்ளதுடன், ஏனைய முக்கிய நிறுவனங்களின் பெயரையும் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
அதிக இலாபம் ஈட்டிய அரச நிறுவனங்கள்
இதன்படி இலங்கை வங்கி - 62.7 பில்லியன் ரூபாய்

ஊழியர் நம்பிக்கை நிதியம் (ETF) - 36.5 பில்லியன் ரூபாய்
இலங்கை துறைமுக அதிகாரசபை - 34.5 பில்லியன் ரூபாய்
மக்கள் வங்கி - 32.6 பில்லியன் ரூபாய்
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் - 29.2 பில்லியன் ரூபாய்
தேசிய சேமிப்பு வங்கி - 22.6 பில்லியன் ரூபாய்
நட்டத்தைப் பதிவு செய்துள்ள நிறுவனங்கள்
இதேவேளை, சில அரச நிறுவனங்கள் குறித்த காலப்பகுதியில் நட்டத்தைப் பதிவு செய்துள்ளன.

இதன்படி, 2026ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் ஜூன் வரையான காலப்பகுதியில் சிறிலங்கன் எயார்லைன்ஸ் 35.6 பில்லியன் ரூபாய் நட்டத்தைப் பதிவு செய்துள்ளது.
லங்கா சர்க்கரை நிறுவனம் 1.53 பில்லியன் ரூபாய் நட்டத்தையும், இலங்கை போக்குவரத்துச் சபை 471 மில்லியன் ரூபாய் நட்டத்தையும் பதிவு செய்துள்ளன.
இதற்கிடையில், மத்திய கிழக்கு மோதலின் தாக்கத்தைக் குறைக்கும் நோக்கில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு 41 பில்லியன் ரூபாயும், தேசிய மின் கட்டமைப்பு இயக்குநர் நிறுவனத்திற்கு 15 பில்லியன் ரூபாயும் திறைசேரியினால் மானியமாக வழங்கப்பட்டுள்ளன.
அத்துடன், 33 அரச நிறுவனங்களைக் கலைப்பதற்கான நடவடிக்கைகளில் அரசாங்கத்தின் மறுசீரமைப்புப் பிரிவு ஈடுபட்டு வருவதாகவும் நிதி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |