அமெரிக்க வரியில் இருந்து தப்ப அரசாங்கத்திற்கு இருக்கும் வழி
இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்க அரசாங்கம் விதித்துள்ள வரி கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கு பின்பற்றக்கூடிய உத்திகளை கோடிட்டுக் காட்டும் ஒரு முன்மொழிவை ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி லக்ஷ்மன் கிரியெல்ல (Lakshman Kiriella) அரசாங்கத்திடம் முன்வைத்துள்ளார்.
இது குறித்து கருத்து தெரிவித்த கிரியெல்ல, கடந்த ஆண்டு செப்டம்பரில் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலுக்கு முந்தைய மேடையில் டொனால்ட் ட்ரம்ப் பல நாடுகளுக்கு வரி விதிப்பதாக எச்சரிக்கை விடுத்ததாக கூறியுள்ளார்.
அதன்படி, இந்தப் பிரச்சினையைத் தீர்க்க பல நாடுகள் அமெரிக்க அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கியிருந்ததாகவும், கலந்துரையாடல்களை நடத்திய அனைத்து நாடுகளும் அமெரிக்காவிடமிருந்து குறைந்த வரி விகிதங்களைப் பெற்றுள்ளதாகவும் கிரியெல்ல சுட்டிக்காட்டியுள்ளார்.
கடுமையான பிரச்சினை
இந்த நிலையில், டொனால்ட் ட்ரம்ப் அந்த அறிக்கையை வெளியிட்ட நேரத்தில், திசைகாட்டி அரசாங்க நிபுணர்களுக்கு அதற்குத் தயாராக நேரம் இருந்தது என்றும், அவர்கள் முன்கூட்டியே தயாராகாததால் இந்த கடுமையான பிரச்சினை எழுந்தது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, முன்கூட்டியே பேச்சுவார்த்தைகளைத் தொடங்கிய அனைத்து நாடுகளும் வரிச்சுமையில் இருந்து விலகிவிட்டதாகவும் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், இலங்கை மீது விதிக்கப்பட்டுள்ள 44 சதவீத வரியைக் குறைக்க இன்னும் தாமதமாகவில்லை என்றும், இதற்காக நிபுணர்கள் குழுவை நியமித்து, நாட்டின் தலைவர்களுடன் முறையான கலந்துரையாடல்களைத் தொடங்க வேண்டும் என்றும் அவர் பரிந்துரைத்துள்ளார்.
பிரச்சினைக்குத் தீர்வு
இதேவேளை, அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வரிகள் மற்றும் செயற்கை வரி தடைகளை நீக்கி, சுதந்திர வர்த்தகப் பொருளாதாரத்தை நோக்கி நகர்வதன் மூலம் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கிரியெல்ல சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், ஆராய்ந்து பார்த்ததில் இடதுசாரி சார்பு கொண்ட நாடுகள் மீது அமெரிக்கா அதிக வரிகளை விதித்துள்ளது தெரியவந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஈழத் தமிழரின் நீதிக்காய் போராடிய இறைவழிப் போராளி!
3 நாட்கள் முன்