இலங்கையில் உயர்தர ஆசிரியர்களுக்கு கடுமையான பற்றாக்குறை
நாட்டிலுள்ள பல பாடசாலைகளில் க.பொ.த உயர்தர (A/L) ஆசிரியர்களுக்கு கடுமையான பற்றாக்குறை நிலவுவதாக இலங்கை ஆசிரியர் சங்கம் (Ceylon teachers service union) தெரிவித்துள்ளது.
இதற்காக ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கு அரசாங்கத்திடம் எந்தத் திட்டமும் இல்லை என்று குறித்த சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் (Joseph Stalin) குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “அரசாங்கம் தொடர்ந்து 30,000 ஆசிரியர் பற்றாக்குறை உள்ளதாகக் கூறி வருகிறது. ஆனால் இதை நிவர்த்தி செய்ய எந்தத் திட்டமும் இல்லை.
ஆங்கில பட்டதாரிகள்
இப்போது கொழும்பு உள்ளிட்ட முக்கிய நகரங்களிலுள்ள தேசிய பாடசாலைகளில் உயர்தர ஆசிரியர் பற்றாக்குறை ஒரு பாரிய பிரச்சினையாக உள்ளது. தற்போதுள்ள ஆசிரியர்களுக்கு தாங்க முடியாத அளவு பணிச்சுமை உள்ளது.
உயர்தர பாடங்களுக்கு அறிவியல், கணிதம் ஆகியவற்றுக்கு ஆங்கில வழி பட்டதாரிகள் தேவை. தகவல் தொழில்நுட்ப (IT) ஆசிரியர்களும் தேவை. ஆனால் அவர்களை ஆட்சேர்ப்பு செய்ய எந்தத் திட்டமும் இல்லை. இது ஒரு பாரதூரமான நெருக்கடி," என்று அவர் தெரிவித்தார்.
இதேவேளை பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறை போன்ற காரணங்களால் ஒழுங்கற்ற மேலதிக வகுப்புகளின் துறை ஊக்குவிக்கப்படுவதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் மனிதவியல் மற்றும் சமூக அறிவியல் பட்டப்பின்படிப்பு நிறுவனத்தின் பணிப்பாளரும், பொருளாதார விரிவுரையாளருமான பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார்.
200 பில்லியன் ரூபா
கல்வி முறைமையில் உள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு இம்முறை வரவு செலவுத் திட்டம் மூலம் நேர்மறையான பதில் எதுவும் கிடைக்கவில்லை என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
அத்துடன், மேலதிக வகுப்புத் துறையில் ஆண்டு முழுவதும் 200 பில்லியன் ரூபாவுக்கு மேல் பணம் புழக்கத்தில் உள்ளதாகவும் பேராசிரியர் வசந்த அத்துகோரல விளக்கியமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
