தனி நபரின் கனவால் சிதையும் இலங்கை!! மாற்றுத் திட்டம் முன்மொழிவு
விவசாயிகள் உள்ளடங்கலாக ஒட்டுமொத்த நாட்டுமக்களினதும் நலனை முன்னிறுத்திய, அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட, நிலைபேறான விவசாய செயற்திட்டமொன்றை முன்னெடுக்கவேண்டிய அவசியம் நாட்டில் ஏற்பட்டிருப்பதாக எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ (Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.
விவசாயிகள் எதிர்கொண்டிருக்கும் நெருக்கடிகள் தொடர்பில் நேற்று அவர் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“ உணவுப்பாதுகாப்பைப் பொறுத்தமட்டில் கடந்த ஒரு தசாப்தத்திற்கும் அதிகமான காலம் தெற்காசியாவில் இலங்கை முதலிடத்தில் இருந்துவந்திருக்கின்றது. 2019 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட உலக உணவுப்பாதுகாப்புச் சுட்டியின் பிரகாரம் இலங்கை 66 ஆவது இடத்தில் இருந்தது.
இலங்கையின் தேயிலை மற்றும் தெங்கு உற்பத்திக்கு சர்வதேச மட்டத்தில் உயர்கேள்வி காணப்பட்டது. அவ்வாறிருந்த எமது நாட்டின் தற்போதைய நிலையென்ன?
அரசாங்கத்தின் தூரநோக்கற்ற, தன்னிச்சையான தீர்மானத்தின் காரணமாக உரியநேரத்தில் பயிர்ச்செய்கைக்கு அவசியமான உரம் கிடைக்கப்பெறாமையினால் விவசாயிகள் மிகமோசமாகப் பாதிக்கப்பட்டிருப்பதுடன் வெகுவிரைவில் நாட்டுமக்கள் அனைவரும் பாரிய உணவுப்பஞ்சத்திற்கு முகங்கொடுக்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
எமது நாட்டின் நிலப்பரப்பில் மூன்றில் ஒரு பங்கு நிலம் விவசாயத்திற்காக ஒதுக்கப்பட்டிருப்பதுடன் நாட்டின் ஊழியப்படையில் நான்கில் ஒரு பங்கினர் நேரடியாகவோ, மறைமுகமாகவோ விவசாயத்துறையுடன் தொடர்புபட்டிருக்கின்றனர். அல்லது தமது வாழ்வாதாரத்திற்காக விவசாயத்துறையில் தங்கியிருக்கின்றனர். நாட்டின் மொத்தத்தேசிய உற்பத்தியில் விவசாயத்துறையின் பங்களிப்பு 7.3 சதவீதமாகும். அதேவேளை 1.8 மில்லியன்பேர் நெல்லுற்பத்தியுடன் தொடர்புபட்டிருக்கின்றனர்.
அதிகரித்துவரும் சனத்தொகைக்கு ஏற்ப கேள்வியும் உயர்வடைவதனால் அரிசி உற்பத்தியை வருடாந்தம் குறைந்தபட்சம் ஒரு சதவீதத்தினாலேனும் அதிகரிக்கவேண்டியுள்ளது. அவ்வாறிருக்கையில் விவசாயத்துறையை முழுமையாக ஸ்தம்பிதமடையச்செய்திருப்பதன் விளைவாக, எதிர்பார்க்கப்படும் இலக்கை அடைந்துகொள்வது மிகவும் கடினமான விடயமாகவே அமையும்.
ரஜரட்ட பிரதேசத்தில் மக்களிடையே பரவிவரும் சிறுநீரகநோய்க்கு ஒரேயொரு காரணம் இரசாயன உரத்தின் பயன்பாடு என்று எவ்வித அடிப்படைகளுமற்ற கருத்தொன்றை முன்வைத்து, அதுகுறித்து எந்தவொரு விஞ்ஞானபூர்வ பரிசோதனைகளையும் முன்னெடுக்காமல், சடுதியாக இரசாயன உர இறக்குமதியைத் தடைசெய்வதற்குத் தீர்மானம் மேற்கொண்டமை முட்டாள்தனமான செயற்பாடாகும்.
உலகில் அனைவரின் மத்தியிலும் தனித்துத்தெரியவேண்டும் என்ற தனியொரு நபரின் கனவை நனவாக்கிக்கொள்ளும் நோக்கில், நாட்டின் விவசாயிகள் உள்ளடங்கலாக அனைத்து மக்களினதும் உயிர்களைப் பணயம்வைத்துச் செயற்படுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமுடியாது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
You may like this