துப்பாக்கி முனையில் தமிழ் அரசியல் கைதிகளை மிரட்டிய லொஹான்- காவல்துறைமா அதிபருக்கு விடுக்கப்பட்டுள்ள உத்தரவு!
இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே, அனுராதபுரம் சிறைச்சாலைக்குள் சென்று அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் கைதிகளை அச்சுறுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பான விசாரணைகளின் முன்னேற்ற அறிக்கையைத் தாக்கல் செய்யுமாறு உயர் நீதிமன்றம் காவல்துறைமா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக அனுராதபுரம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் கைதிகள் சிலர் தாக்கல் செய்த அடிப்படை மனித உரிமை மீறல் மனுவை இன்று விசாரணைக்கு எடுத்த போதே நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
வழக்கு எஸ்.துரைராஜா, அச்சல வெங்கப்புலி, அர்ஜூன ஒபேசேகர ஆகிய மூன்று நீதியரசர்கள் அடங்கிய அமர்வின் முன் மனு விசாரணைக்கு எடுக்கப்பட்டது. இந்த மனுவை விசாரணைக்கு எடுப்பது சம்பந்தமாக ஏற்கனவே நீதிமன்றம் அறிவிப்பாணை வெளியிட்டுள்ளதுடன் வழக்கிற்கு ஏதுவான சம்பவம் குறித்து விசாரணை நடத்துமாறு உயர் நீதிமன்றம், காவல்துறைமா அதிபருக்கு இதற்கு முன்னர் உத்தரவிட்டிருந்தது.
மனு இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது மனுதார் சார்பில் ஆஜரான அரச தலைவர் சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன், அந்த விசாரணைகளின் முன்னேற்றம் தொடர்பாக காவல்துறைமா அதிபரிடம் கோருமாறு நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.
இதனை கவனத்தில் எடுத்துக்கொண்ட நீதியரசர்கள் அமர்வு, அந்த விசாரணைகளின் தற்போதைய முன்னேற்றம் பற்றிய அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு காவல்துறைமா அதிபருக்கு உத்தரவிட்டது.
இந்த வழக்கு மீண்டும் எதிர்வரும் ஆகஸ்ட் 9 ஆம் திகதி விசாரணைக்கு எடுக்கப்படவுள்ளது.
