போர் எதிரொலியால் குறைந்த தேயிலை ஏற்றுமதி: மில்லியன் டொலர் வருமான இழப்பு
கடந்த ஒரு வார காலப்பகுதியில் தேயிலை ஏற்றுமதி மூலம் இலங்கைக்குக் கிடைக்கவிருந்த 10 முதல் 15 மில்லியன் டொலர் வருமானம் இழக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தைத் தேயிலை ஏற்றுமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கை தேயிலை ஏற்றுமதியில் கிட்டத்தட்ட பாதி அளவு மத்திய கிழக்கு நாடுகளுக்கே ஏற்றுமதி செய்யப்படுகிறது.
தேயிலை ஏற்றுமதி
அத்தோடு, தேயிலை ஏற்றுமதி மூலம் ஆண்டுக்குக் கிடைக்கும் 1.5 பில்லியன் டொலர் வருமானத்தில் 530 மில்லியன் டொலர் வருமானம் மத்திய கிழக்கு நாடுகளிலிருந்தே கிடைக்கிறது.
இந்தநிலையில், போர் காரணமாகக் கப்பல் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாலும் காப்புறுதி கட்டணங்கள் அதிகரித்துள்ளதாலும் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாகத் தேயிலைத் தோட்ட உரிமையாளர்கள் பெரும் நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர்.
இந்த நிலைமையைக் கருத்தில் கொண்டு, எதிர்வரும் சித்திரை புத்தாண்டு காலத்தில் தோட்ட உரிமையாளர்களுக்கு ஏற்படும் நிதி நெருக்கடியைத் தவிர்க்கச் சலுகைக் கடன்களை வழங்குமாறும் தேயிலை விற்பனை மற்றும் உர விநியோகத்தில் சலுகைகளை வழங்குமாறும் தேயிலைத் தோட்ட உரிமையாளர்கள் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
அத்துடன், ஏற்றுமதி வரியில் 15 சதவீதத்தை ஒதுக்கி, இவ்வாறான அவசர காலங்களில் தோட்ட உரிமையாளர்களைப் பாதுகாப்பதற்கான சுயாதீன நிதி ஒன்றை உருவாக்குமாறும் அவர்கள் முன்மொழிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |