இலங்கை-தாய்லாந்து சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்துக்கு எதிராக மனுத்தாக்கல்!
இலங்கை மற்றும் தாய்லாந்துக்கு இடையிலான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை சவாலுக்குட்படுத்தி உச்ச நீதிமன்றில் அடிப்படை உரிமை மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வர்த்தக ஒப்பந்ததந்தின் நடைமுறையை தடுக்குமாறு கோரி இலங்கையின் தகவல் தொழில்நுட்ப வல்லுநர் சங்கத்தின் தலைவர் கபில ரேணுக பெரேராவால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சுதந்திர வர்த்தக ஒப்பந்தம்
தாய்லாந்துக்கும் இலங்கைக்கும் இடையிலான வர்த்தகம், முதலீடு, சுங்க செயற்பாடுகள் மற்றும் அறிவுசார் சொத்துரிமை உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை உள்ளடக்கிய சந்தை வாய்ப்புகளை மேம்படுத்தும், சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் கடந்த பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி கைச்சாத்திடப்பட்டது.
சுதந்திர தினத்தை முன்னிட்டு தாய்லாந்து பிரதமர் ஸ்ரேத்தா தவிசின் இலங்கையை வந்தடைந்த போது குறித்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
அடிப்படை உரிமை மனு
இந்த நிலையில், குறித்த ஒப்பந்தத்துக்கு எதிராக இன்று உச்ச நீதிமன்றில் அடிப்படை உரிமை மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சட்ட மா அதிபர், பிரதமர், அமைச்சரவை அமைச்சர்கள், உள்ளிட்ட 27 பேர் இந்த மனுவின் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.
இலங்கை மற்றும் தாய்லாந்துக்கு இடையிலான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்துக்கு கடந்த ஜனவரி மாதம் 24 ஆம் திகதி அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டதாக கபில ரேணுக பெரேரா சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், தகவல் அறியும் சட்டத்தின் கீழ் இந்த ஒப்பந்தத்தின் பிரதியை பகிரங்கப்படுத்துமாறு கோரியிருந்த போதிலும், குறித்த ஒப்பந்தம் இதுவரை பகிரங்கப்படுத்தப்படவில்லை மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |