அமெரிக்க வரியால் கதிகலங்கி நிற்கும் இலங்கை அரசு எடுத்துள்ள இறுதி முடிவு!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்த புதிய பரஸ்பர வரியை முறையை குறைப்பதற்கும், இரு நாடுகளுக்கும் பயனளிக்கும் வர்த்தக மற்றும் முதலீட்டுக் கொள்கைகளில் உடன்படவும் அமெரிக்காவுடன் இராஜதந்திர மட்ட பேச்சுவார்த்தைகளை நடத்த அரசாங்கம் எதிர்பார்ப்பதாக தொழிலாளர் அமைச்சர் அனில் ஜயந்த தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் 9 ஆம் திகதி இந்த வரி நடைமுறைப்படுத்தப்படுவதற்கு முன்னதாக பேச்சுவார்த்தைகள் மூலம் பரஸ்பர வரியைக் குறைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொருளாதார சூழ்நிலை
அத்தோடு, வரியைத் தடுக்க அரசாங்கம் தலையிடத்தவறிவிட்டது என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளை மறுத்த அமைச்சர், அரசாங்கம் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் கலந்துரையாடியுள்ளதாகவும் கூறியுள்ளார்.
இதேவேளை, இவ்வாறான சூழ்நிலையில் என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பது குறித்து அமைச்சுக்கள் மற்றும் நிபுணர் குழுக்கள் போன்றவற்றுடன் கலந்துரையாடியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை சர்வதேச நாணய நிதியத்துடன் ஒரு திட்டத்தில் ஈடுபட்டுள்ள ஒரு சிறப்பு பொருளாதார சூழ்நிலையை எதிர்கொள்கிறது என்றும், பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மீண்டு வருவதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
சிறப்பு சலுகைகள்
இந்த நிலையில், புதிய வரி காரணமாக ஏற்றுமதிகளின் விலைகள் உயரும் எனவும், அமெரிக்க சந்தையில் நமது ஏற்றுமதிகளுக்கான போட்டி குறையக்கூடும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறானதொரு சூழ்நிலையில், தேவை மற்றும் ஏற்றுமதி வருவாயில் வீழ்ச்சி ஏற்படலாம் என்றும் ஏற்றுமதியாளர்கள் லாபக் குறைப்புகளைச் சந்திக்க வேண்டியிருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அமெரிக்க அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தைகள் தோல்வியுற்றால், GSP+ வசதியின் கீழ் சிறப்பு சலுகைகளைப் பெறுவது குறித்த கலந்துரையாடல்கள் போன்ற மாற்று வழிகளை இலங்கை பரிசீலிக்கும் என்று தொழிலாளர் அமைச்சர் அனில் ஜயந்த வலியுறுத்தினார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
