ஆபத்தான நிலையை நோக்கி இலங்கை - விடுக்கப்பட்ட கடும் எச்சரிக்கை
அதிகரித்துச் செல்லும் கொரோனா தொற்றாளர்களால் இலங்கை ஆபத்தான நிலையை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதாக எசசரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்தியகுழு மற்றும் ஊடகக்குழு உறுப்பினரான வைத்திய நிபுணர் வாசன் ரட்ணசிங்கம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் ஆதாரத்துடன் விளக்குகையில்,
இலங்கையில் இதுவரையில் சுமார் 97,000 புத்தாண்டுக் கொத்தணி தொற்றாளர்கள் இனங்காணப்பட்டிருக்கிறார்கள். அதேபோன்று சுமார் 974 பேர் உயிரிழந்துள்ளனர். ஏப்ரல் 18 ஆம் திகதி தொடக்கம் தற்போது வரையான மிகக்குறுகிய காலத்தில் 60 சதவீதமான கொவிட் – 19 மரணங்கள் நிகழ்ந்திருக்கின்றன.
எனவே நாடு மிகவும் ஆபத்தான நிலையை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது. இதன் பாரதூரத்தன்மையை உணர்ந்து அனைவரும் பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டிய கட்டாயம் உள்ளது என்றார்.
மேலும் பி.சி.ஆர் பரிசோதனைகள் குறைவான எண்ணிக்கையில் மேற்கொள்ளப்படும் காலப்பகுதியில் அதிகளவான நோயாளர்கள் அடையாளங்காணப்படுகின்றார்கள். எனவே பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதன் ஊடாகவே உண்மையான நோயாளர்களின் எண்ணிக்கையை அறியமுடியும்.
பரிசோதனைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டால் தற்போது இனங்காணப்படும் நோயாளர்களை விடவும் மூன்று அல்லது நான்கு மடங்கான நோயாளர்கள் இனங்காணப்படுவார்கள். தொற்றின் தீவிரத்தன்மையைக் குறைப்பதற்கு எமது நாட்டின் சனத்தொகையில் 70 சதவீதமானோருக்கு தடுப்பூசி வழங்கப்பட வேண்டும்.
ஆகவே அனைத்துக் காரணிகளையும் கருத்திற்கொண்டு எந்தெந்தத் தரப்பினருக்கு தடுப்பூசிகளை முதலில் வழங்கவேண்டும் என்ற அடிப்படையில் குறித்த வழிகாட்டியைத் தயாரித்திருக்கின்றோம் என்றார்.