ஆசிய ஆபிரிக்க நாடுகளிடம் சரணாகதியடைய முயற்சிக்கும் சிறிலங்கா!
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை அமர்வில் பங்கேற்கும் சிறிலங்கா பிரதிநிதிகள் ஆசிய மற்றும் ஆபிரிக்க நாடுகளின் வாக்குகளை பெற முயற்சிப்பதாக சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51வது அமர்வில் சிறிலங்கா தொடர்பான புதிய தீர்மானம் இம்மாத இறுதியில் நிறைவேற்றப்பட உள்ளதாக வெளியான அறிவிப்பையடுத்தே, இந்த தீர்மானத்தை நிறைவேற்றுவதை தடுக்கும் வகையில் ஆசிய, ஆபிரிக்க நாடுகளின் ஆதரவை சிறிலங்கா தேடுவதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.
மேலும் ஆதரவு கிடைக்கும்
அதேவேளை அமெரிக்கா, பிரித்தானியா, ஜேர்மனி, கனடா, மலாவி, வடக்கு மாசிடோனியா மற்றும் மொன்டனீக்ரோ ஆகிய நாடுகளின் அனுசரணையின் கீழ் முன்வைக்கப்படவுள்ள பிரேரணைக்கு மற்றும் பல நாடுகளின் ஆதரவும் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சிறிலங்காவில் சர்வதேச அதிகார வரம்பை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான சட்ட மற்றும் பிற வழிகாட்டுதல்களை வழங்குவது மற்றும் சர்வதேச சட்டத்தை மீறி குற்றம் செய்ததற்கான தெளிவான சாட்சியங்களைக் கொண்ட நபர்களுக்குத் தண்டனை வழங்குவது குறித்த தீர்மானம் தொடர்பிலும் கவனம் செலுத்துகிறது.
அரசியல் தலைவர்களுக்கு எதிராக நடவடிக்கை
இலங்கையில் மனித உரிமைகள் பலவீனமடைவதற்கு காரணமான பொருளாதாரக் குற்றங்களைச் செய்த அரச உயர் அதிகாரிகள் மற்றும் அரசியல் தலைவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என இந்த வரைவுத் தீர்மானங்கள் பரிந்துரைக்கின்றன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.