தமிழ்த்தேசிய கட்சி உறுப்பினர்களுடனான சந்திப்பில் அமெரிக்க துணைத் தூதர்!
சிறிலங்காவிற்கான அமெரிக்க துணைத் தூதர் டக் சோனெக் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டு தமிழ்த்தேசிய அரசியல் தரப்புகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இந்த சந்திப்புக்கள இன்றைய தினம் தனியார் விடுதி ஒன்றில் இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகளை தனித்தனியாக சந்தித்து கலந்துரையாடினார்.
தமிழ்த்தேசிய பிரதிநிதிகளுடன் சந்திப்பு
இதன் போது தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன், தர்மலிங்கம் சித்தார்த்தன், வட மாகாண சபை அவை தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தரப்புக்கள் தனியாகவும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன், சட்டத்தரணி கனகரட்ணம் சுகாஸ், வாசுகி சுதாகர் ஆகியோர் தனியாகவும் சந்தித்து கலந்துரையாடினர்.
இதன்போது சமகால நிலைமைகள் தொடர்பில் அமெரிக்க துணைத் தூதர் அரசியல் பிரதிகளிடம் கேட்டறிந்து கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கஜேந்திரகுமார் தலைமையிலான சந்திப்பு
இதேவேளை, யாழ்ப்பாணம் வலி வடக்கு மயிலிட்டி துறைமுகத்துக்கு சென்ற அவர், துறைமுக அதிகாரிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டதுடன் கடற்தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் பொருளாதார நிலைமை தொடர்பிலும் கேட்டு அறிந்து கொண்டார்.
அத்துடன் தற்போது ஏற்பட்டுள்ள மண்ணெண்ணெய் பிரச்சினை கடற்தொழிலாளர்கள் எதிர்கொள்கிற முக்கிய பிரச்சினையாக காணப்படுகின்றமை தொடர்பில், இதன்போது அவர் கடற்தொழிலாளர்களிடம் கேட்டு அறிந்து கொண்டார்.
கடற்தொழிலாளர்களுடன் சந்திப்பு
அத்துடன் மயிலிட்டி கிராம அபிவிருத்தி சங்கத்துக்கு சென்ற அவர், அங்கு மீள்குடியேற்ற குழுவினரை சந்தித்து கலந்துரையாடினர்.
மேலும் காணிகள் விடுவிக்கப்படாமை தொடர்பிலும் பொதுமக்களின் காணிகள் அதி உயர் பாதுகாப்பு வலையத்தில் இருக்கின்றமை தொடர்பிலும் அவருக்கு வலிவடக்கு பிரதேச சபையின் தவிசாளர் சுகிர்தன் தெளிவுபடுத்தினார்.
இது தொடர்பில் அவர் சிறிலங்கா அதிபருடன் பேசி ஒரு நல்லதொரு முடிவினை பெற்று தருவதாக கூறியுள்ளார்.


