வடக்கு கிழக்கை அடிப்படையாகக்கொண்டு ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் வெசாக் விழா!
ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் அரச வெசாக் விழா வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை அடிப்படையாகக் கொண்டு நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நாகதீப ரஜமஹா விகாரையை மையமாகக் கொண்டு அரச வெசாக் விழாவை நடத்துவதற்கு புத்தசாசன, அமைச்சரும் பிரதமருமான மஹிந்த ராஜபக்ச அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
ஸ்ரீலங்கா அரச வெசாக் தினம் எதிர்வரும் மே மாதம் கொண்டாடப்படவுள்ளது. இந்த நிலையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் 65 விகாரைகள் மற்றும் 35 அறநெறி பாடசாலைகளை ஒன்றிணைத்து இம்முறை அரச வெசாக் விழாவை நடத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பிரதமர் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில குணவர்தனவுக்கு அறிவித்துள்ளார்.
பாரம்பரிய வெசாக் விழாவிலிருந்து மாறுபட்டதாக, பிற மதங்களுடன் இணைந்து அரச வெசாக் விழாவை ஏற்பாடு செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அந்த செயற்பாட்டை புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் கீழுள்ள இந்து, கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் விவகார திணைக்களங்கள் ஒன்றிணைந்து முன்னெடுக்கவுள்ளன.
நாகதீப விகாராதிபதி, கிழக்கு தம்னகடுவ மாகாணங்களின் பிரதான சங்கநாயக்கர் உள்ளிட்ட மஹா சங்கத்தினர் பங்கேற்றிருந்தனர்.
மஹாசங்கத்தினருடன் இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க, நாடாளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன், புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில குணவர்தன, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் ஓய்வுபெற்ற கமல் குணரத்ன உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.