நிலவும் சீரற்ற காலநிலை : நீர்த்தேக்கங்களின் வான் கதவுகளும் திறப்பு
பொலன்னறுவை (Polonnaruwa) மாவட்டம் உள்ளிட்ட மகாவலி பி வலயத்தில் பல நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக, பல முக்கிய நீர்த்தேக்கங்கள் மற்றும் குளங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளது.
இதன்படி, கந்தளாய் நீர்த்தேக்கத்தின் 10 வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன, மேலும் கவுடுல்ல குளத்தின் 2 வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையில், மாதுருஓயா மற்றும் குடா ஓயா ஆகியவை நிரம்பி வழிவதால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மழை காரணமாக பல பகுதிகளில் சுமார் 2,000 ஏக்கர் நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குளங்களின் வான் கதவுகள்
மேலும், ஊவா பரணகமவின் கஹடதலாவ பகுதியில் உள்ள தோட்ட வீடுகள் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பையும் வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) வெளியிட்டுள்ளது.
மழை நிலைமை | திருகோணமலையிலிருந்து மட்டக்களப்பு மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக மாத்தறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. |
காற்று | நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு முதல் கிழக்கு வரையான திசைகளிலிருந்து வீசக் கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20-30 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சிலாபத்திலிருந்து புத்தளம்மற்றும் மன்னார் ஊடாக காங்கேசந்துறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. |
கடல் நிலை | சிலாபத்திலிருந்து புத்தளம்மற்றும் மன்னார் ஊடாக காங்கேசந்துறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற் பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன் அக்கடற் பிரதேசங்கள் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும். |
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
