வடக்கு கிழக்கில் காணி விடுவிப்பு : ஐநா ஆணையாளருடன் முரண்படும் சிறிலங்கா இராணுவம்
வடக்கு கிழக்கில் இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகளை விடுவிப்பதற்கு சிறிலங்கா படை அதிகாரிகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு தமது பெயர்களை வெளிப்படுத்த விரும்பாமல் கருத்து வெளியிட்ட சிறிலங்கா இராணுவ அதிகாரிகள் குழுவொன்று, இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்ட நிலங்களை விடுவிக்குமாறு- ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் கூறியிருப்பதை நியாயமற்றது எனத் தெரிவித்துள்ளது.
90 வீதமான நிலங்களை விடுவித்து விட்டோம்
போரின் போது வடக்கு, கிழக்கு மாகாணங்களில், இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்ட 90 வீதமான நிலங்கள், 2010ஆம் ஆண்டில் இருந்து, விடுவிக்கப்பட்டு விட்டதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
2009 மே மாதம், போர் முடிவுக்கு வந்த பின்னர் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் சிறிலங்கா ஆயுதப்படைகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளதாகவும், அந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நிலங்களை விடுவிக்குமாறு கோரும் ஆணையாளர்
பொது மற்றும் தனியார் காணிகள் விடுவிக்கப்படுவது குறித்து தொடர்புடைய ஐ.நா. நிறுவனங்களுக்குத் தெரிவிக்கப்பட்டிருந்தாலும், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நிலங்களை விடுவிக்க வேண்டும் என்று கோரியிருப்பதாகவும் இராணுவ அதிகாரிகள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
காணிகள் விடுவிப்பு நிலைமையை உறுதிப்படுத்த, ஐக்கிய நாடுகள் சபை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ஒரு உண்மை கண்டறியும் பணியை மேற்கொள்ள முடியும் என்றும் அந்த வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
