சூடுபிடிக்கும் ஈஸ்டர் தாக்குதல் விவகாரம் : சிறிலங்கா இராணுவ அதிகாரி விடுத்துள்ள எச்சரிக்கை
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் விவகாரம் தொடர்பாக மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிசுக்கு சிறிலங்கா இராணுவ உயர் அதிகாரி ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் விசாரணையை சில இராணுவ அதிகாரிகள் தடுத்து வருவதாக, திறந்த நீதிமன்றத்தில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் குற்றம்சாட்டியதை அடுத்து, இராணுவத்தின் சட்டப் பிரிவைச் சேர்ந்த உயர் அதிகாரி ஒருவர் முதலில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரலை சந்தித்து, பேச விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.
இராணுவத்திற்கு அவமானத்தை ஏற்படுத்திவிட்டார்
தொலைபேசியில் நடைபெற்ற அந்த உரையாடல், ஆரம்பத்தில் சுமுகமாக இருந்தது.

எனினும், ஈஸ்டர் தாக்குதல்கள் குறித்த விசாரணைகளுக்கு இராணுவம் ஆதரவளிக்கவில்லை என்று நீதிமன்றத்தில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் வெளியிட்ட கருத்தின் மூலம் அவர் இராணுவத்திற்கு அவமானத்தை ஏற்படுத்திவிட்டார் என அந்த அதிகாரி கூறியபோது, உரையாடல் சூடு பிடித்துள்ளது.
இராணுவம் - ஜனாதிபதியிடம் புகார் அளிக்க வேண்டியிருக்கும்
இராணுவம் விசாரணைக்கு ஆதரவாகவே இருந்து வருவதாக அந்த அதிகாரி வாதிட்ட போதிலும், அது உண்மையல்ல என்று மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் மறுத்துள்ளார். ஒரு கட்டத்தில், மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் தொடர்ந்து இதுபோன்ற அறிக்கைகளை நீதிமன்றத்தில் வெளியிட்டால், அவரது நடத்தை குறித்து சிறிலங்கா இராணுவம் ஜனாதிபதியிடம் புகார் அளிக்க வேண்டியிருக்கும் என்று, அந்த இராணுவ அதிகாரி எச்சரித்துள்ளார்.

தாக்குதல்கள் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களின் சட்ட உதவிக்கு சிறிலங்கா இராணுவப் புலனாய்வுத் துறை நிதியுதவி அளித்து வருவதாகவும், இது சரியல்ல என்றும் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் பீரிஸ் குற்றம் சாட்டியிருந்தார்.
விசாரணைகளுக்கு உதவ மறுக்கும் நபர்கள்
மேலும், தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்கு உதவ மறுக்கும் நபர்கள் குறித்து நீதிமன்றத்திற்குத் தெரிவிக்க இருப்பதாகவும், அவர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவுள்ளதாகவும் திலீப பீரிஸ், சிறிலங்கா இராணுவ அதிகாரியிடம் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா இராணுவ அதிகாரிக்கும் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிசுக்கும் இடையே நடந்த உரையாடல் குறித்து சட்டமா அதிபர் பரிந்த ரணசிங்கவுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளதாக சண்டே ரைம்ஸ் வார இதழ் தகவல் வெளியிட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
முகமாலை நவீன போரியல் விதிகளை மாற்றியமைத்த ஈழத்து ஸ்டாலின்கிராட் 2 மணி நேரம் முன்