வட்டுக்கோட்டை 50 எழுச்சி மாநாட்டு உரை : முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள்
வட்டுக்கோட்டை தீர்மானம் ஒரு அரசியல் ஆவணம் மட்டுமல்ல, இது ஒரு தேசிய இனத்தின் அரசியல் உணர்வின் வெளிப்பாடு. தலைமுறைகளின் தியாகங்களால் வடிவமைக்கப்பட்ட ஒரு தேசியப் பிரகடனம் என வட்டுக்கோட்டை 50 எழுச்சி மாநாட்டு உரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வட்டுக்கோட்டை பிரகடனத்தின் 50 ஆவது ஆண்டின் நிறைவு எழுச்சி மாநாடு நேற்று (20) யாழ்ப்பாணத்தில் தந்தை செல்வா கலையரங்கில் நடைபெற்றது.
இதன்போது நிகழ்த்தப்பட்ட வட்டுக்கோட்டை 50 எழுச்சி மாநாட்டு உரையில், பல தசாப்தங்களாக தமிழர்கள் சமத்துவம், மொழி உரிமை, கல்வி உரிமை, நில உரிமை மற்றும் அரசியல் பங்குபற்றலுக்காக ஜனநாயக வழிகளில் போராடினர். ஆனால் ஒவ்வொரு முறையும் அவர்கள் எதிர்கொண்டது மறுப்பையும் ஒடுக்குமுறையையும், சிங்கள ஏகாதிபத்தியத்தின் வன்முறையையும்தான் வட்டுக்கோட்டைத் தீர்மானம் தோன்றுவதற்கு காரணமாக அமைந்ததாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தமிழ் தேசியம் என்ற ஒற்றைக் குடை
1956 ஆம் ஆண்டின் "சிங்களம் மட்டும்" சட்டம், 1958, 1977, 1981, 1983 ஆகிய ஆண்டுகளின் தமிழ் மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட இனவன்முறைகள், கல்வியில் தரப்படுத்தல், அரச ஆதரவு குடியேற்றங்கள் இவை அனைத்தும் தமிழர்களின் அரசியல் எதிர்காலம் குறித்த ஆழமான கேள்விகளை எழுப்பிய பின்னணியில்தான் வட்டுக்கோட்டைத் தீர்மானம் உருவானதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்போது, ஈழத்தமிழ் மக்களிடமும், இன்றைய இளைஞர்களிடமும், சிங்கள சகோதர, சகோதரிகளிடமும், தாய்த் தமிழக தொப்புள் கொடி உறவுகளிடமும், இந்திய தேசத்து மக்களிடமும், பல்தேசிய உலக நாடுகளிடமும் சில கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
வட்டுக்கோட்டை50 ஒரு முடிவல்ல எனவும் வரலாற்றை நினைவுகூரும் ஒரு நிகழ்வாக மட்டுமன்றி, தமிழர் அரசியல் சிந்தனையை புதுப்பிக்கும் ஒரு சந்திப்பாகவும் இது அமைய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
பூமி பந்தெங்கும் பரந்து வாழும் தமிழினம், தமிழ் தேசியம் என்ற ஒற்றைக் குடையின் கீழ் ஒன்றுபட வேண்டும். தமிழன் இல்லாத நாடும் இல்லை; தமிழனுக்கு என்று ஒரு நாடுமில்லை என்ற குறையை போக்க வட்டுக்கோட்டை தீர்மானம் முன்மொழிந்த எமது தேசத்தினை கட்டியெழுப்ப ஒன்றுபட வேண்டும். இதனூடாக தமிழருக்கான தேசம் இந்த மண்ணில் பிறக்க அனைவரும் பாடுபட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |




