மலேசியாவில் இலங்கையர் உட்பட மூவர் கைது
மலேசியாவின் (Malaysia) - புக்கிட் தம்பூன் பகுதியில் நடத்தப்பட்ட சோதனையில் போதைப்பொருட்களுடன் இலங்கையர் ஒருவரையும் உள்நாட்டு பிரஜைகள் இருரையும் மலேசிய காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
முதலில் தாமான் தம்பூன் பெர்மாயில் பகுதியிலுள்ள வீடொன்றில் நடத்தப்பட்ட சோதனையில் இரண்டு உள்ளூர் பிரஜைகள் கைதாகியுள்ளனர்.
அவர்களிடமிருந்து 1,113 கிராம் ஹெரோயின், 641 கிராம் ஹெரோயின் மூலப்பொருள், 4 கிலோகிராம் காஃபின், பல இரசாயனங்கள் மற்றும் போதைப்பொருள் பதப்படுத்தும் கருவிகள் என சந்தேகிக்கப்படும் உபகரணங்களும் கைப்பற்றப்பட்டன.
மலேசிய காவல்துறை
பின்னர் இந்த வீட்டுக்கு அருகில் உள்ள மற்றொரு வீட்டில் நடத்தப்பட்ட இரண்டாவது சோதனையில், 26 கிலோ காஃபினுடன் இலங்கையர் ஒருவர் கைதானார்.
இரண்டு சோதனைகளிலும் கைப்பற்றப்பட்ட அனைத்து போதைப் பொருட்களும் 74,500 மலேசிய ரிங்கிட் (சுமார் 53 இலட்சம் ரூபாய்) மதிப்புடையவை என மலேசிய காவல்துறை தெரிவித்துள்ளது.
கைதான இரண்டு உள்ளூர் பிரஜைகளுக்கு எதிராக போதைப்பொருள் தொடர்பான முந்தைய குற்றச்சாட்டுக்கள் இருந்ததாகவும்,இலங்கையருக்கு எதிராக குற்றப்பதிவுகள் எதுவும் இருக்கவில்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஜனவரி முதல் இந்த குழு செயல்பட்டு வருவதாகவும், அவர்கள் உள்ளூர் சந்தைக்காக ஹெரோயின் தயாரித்துள்ளதாகவும் புலனாய்வு தகவல்கள் தெரிவித்துள்ளன.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை போதைப்பழக்கத்துக்கு அடிமையான சுமார் 50 ஆயிரம் பேர் பயன்படுத்த முடியும் என அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
