மெல்லச் சாகும் தமிழர் பூமி - அரங்கேறும் தந்திர உத்திகள்..!
சிங்கள மயமாக்கல் அரசியல் பொறிமுறையின் நிகழ்ச்சி நிரல் உத்திகள் எவை என்றும் அவை எவ்வாறு முன்னெடுக்கப்படுகிறது என்பது பற்றியும் முன்னாள் மாநகர சபை உறுப்பினர் வி. பூபாலராஜா விளக்கியுள்ளார்.
அவர் குறிப்பிட்டுள்ளதாவது, சிங்கள பெளத்த அடிப்படைவாத ஆளும் வர்க்க பிற்போக்குவாதிகள், 75 ஆண்டுகளாக இலங்கையை ஆண்டு வருகின்றார்கள்.
இவர்களது நிகழ்ச்சிப் பொறிமுறையானது ஆளும்கட்சி மாறினாலும் ஒரே விதமாகத்தான் அமைந்துள்ளன. ஆட்சியாளர்களது சிங்கள மயமாக்கல் பொறிமுறையிலுள்ள அபதந்திர உத்திகள் எவை எனப் ஆராயவோம்.
அப தந்திர உத்திகள்
1) சிங்கள பெளத்த அடிப்படை வாதத்தினை சிங்கள மக்கள் மத்தியில் வக்கிரமாக விதைத்தல்.
2) சிங்களவர்களின் வாக்குப் பலத்தின் மூலமாக ஆட்சி அதிகாரத்தினைக் கைப் பற்றுதல்.
3) தமிழர் மீது அடக்கு முறை, ஒடுக்குமுறைகளைப் பிரயோகித்தல்
4) தமிழின அழிப்புடன், பொருளாதார அழிப்பும்,அகதிகளாக்கி வெளியேற்றுதலும்
5) தமிழ் கலாசார அழிப்பும்,உணர்வழிப்பும்
6) தமிழர் தாயகக்காணிகளை அபகரித்தல்
7) பெளத்த சின்னங்கள், விகாரைகளை அமைத்தல்
8) சிங்களக் குடியேற்றங்களை அமைத்தல்
9) படைமுகாம்கள் அமைத்து சிங்கள குடியேற்றங்களைப் பாதுகாத்தல்
முதலாவது - இரண்டாவது உத்தி
சிங்கள பெளத்த அடிப்படைவாதத்தினை சிங்களவர்கள் மத்தியில் விதைத்தல் என்பது முதலாவது உத்தியாகும். இதன் போது தமிழர்களுக்கு எதிராக துவேசக் கருத்துகள் பரப்பப்படுகின்றன.
அதன் மூலம் 74 சதவீத சிங்களவர்களின் வாக்குப் பலத்தினைக் கொண்டு தேர்தல்களின் ஊடாக அதிகாரத்தினைக் கைப்பற்றுவது இரண்டாவது உத்தியாகும். இதனை சிங்கள இன ஜனநாயகமாகவே கூற முடியும்.
இங்கு சலுகை நாடிகளும், எடுபிடிகளுமான தமிழ்பேசும் அரசியல்வாதிகளும் குறிப்பிட்டளவு வாக்குகளை சிங்கள ஜனநாயகத்திற்கு சேகரித்துக் கொடுக்கின்றனர். இருந்தாலும் தமிழ் மக்களின் ஆணை சிங்கள ஆட்சியாளர்க்குக் கிடைப்பதில்லை.
சலுகை நாடிகள் சில அமைச்சுகளைப் பெற்று தமிழ் மக்களது உரிமைகளைப் பேணாது விட்டாலும் தமது பொருளாதாரத்தை வளர்த்துக் கொள்கின்றனர். கூட்டுப் பொறுப்பு என்ற பூட்டுகளால் சலுகைவாத எடுபிடி அமைச்சர்களின் வாய்கள் பூட்டப்படுகின்றன.
இவர்கள் சிங்கள ஜனநாயகத்திற்கான முட்டுகளாக இருப்பர். தலையாட்டுவதும், கையுயர்த்துவதுந்தான் சலுகைவாத தமிழ்பேசும் அமைச்சர்களின் நன்றிக்கடன்களாக அமையும். இதனால் தமது மக்களின் நலன்களை இவர்கள் பேண மாட்டார்கள்.
மூன்றாவது - நான்காவது உத்தி
சிங்கள அடிப்படைவாத அதிகார வர்க்கத்தின் மூன்றாவது உத்தி தமிழர் மீதான அடக்குமுறை ஒடுக்கு முறையாகும். இதற்கு இனவாத மதவாத சட்டங்கள் உதவுகின்றன. அத்துடன் அவசரகாலச் சட்டம்,பயங்கரவாத தடுப்புச்சட்டம் என்பன அதிகார வர்க்கத்திற்கு பக்கபலமாக அமைகின்றன.
நான்காவது உத்தி இன அழிப்பாகும்.1958,1977,1983,2009 ஆண்டுகள் தமிழின அழிப்புகள் நடைபெற்ற மோசமான காலப்பகுதிகளாகும். சிங்கள ஆட்சியாளர்களின் நான்காவது உத்தியாக அமைவது கலாசார அழிப்பாகும்.
வழிபாட்டுத் தலங்கள்,கல்வெட்டுகள் சிலைகள்,விக்கிரகங்கள்,நூலகங்கள்,சமய அடையாளங்கள் போன்றவை அழிக்கப்படுவதை கலாசார அழிப்பாகக் கொள்ளலாம்.
யாழ்நூலக எரிப்பு, வெடுக்குநாறி ஆதிசிவனாலய அழிப்பு, திருக்கோணேசர் ஆலயக்காணி அபகரிப்பு முயற்சி,வடமுனை நெடிய கல்மலை பெளத்தாலய நிருமாணிப்பு, கரடியனாறு குசலான மலை முருகன் ஆலய அபகரிப்பு முயற்சி போன்றவை இதற்கான சான்றுகளாகும்.
ஐந்தாவது - ஆறாவது உத்தி
தமிழ் உணர்வுகள், நினைவுகளை அழிப்பது ஐந்தாவது உத்தியாகும். இதற்காக துயிலும் இல்லங்கள், நினைவுத்தூபிகள்,தமிழ்த் தலைமைகளது இல்லங்கள் போன்றவை அழிக்கப்படுகின்றன.
அதை விடவும் தியாகிகள், போராளிகள் போன்றவர்களை நினைவேந்தத்தடை விதிப்பதும் ஓர் உத்தியாக அமைகின்றது. மேலும் தமிழர்களின் வரலாறுகளை அழிப்பதற்கான உத்திகளும் கையாளப்பட்டுள்ளன.
யாழ் நூலக எரிப்பு, திரிபுபடுத்தும் சிங்கள வரலாற்று நூல்கள், பாடப்புத்தகங்களிலுள்ள திரிபுகள் என்பன தமிழர் வரலாற்றை அழிக்கும் உத்திகளாக அமைகின்றன.
அடுத்து ஆறாவது உத்தியாக அமைவது தமிழர்களின் காணிகளை அபகரித்துக்கொள்வதாகும்.
ஏழாவது - எட்டாவது - ஒன்பதாவது உத்தி
ஏழாவது உத்தியாக அமைவது சிங்கள பெளத்த மயமாக்கலை ஏற்படுத்துவதாகும். புத்தர் சிலைகளை பிரதிஷ்டை செய்தல்,விகாரைகளை அமைத்தல் என்பன இவ்வகை உத்திகளாகும். முல்லைத்தீவு குருந்தூர் மலையில் அமைக்கப்படும் சட்ட விரோதமான விகாரை இதற்கான ஓர் உதாரணமாகும்.
எட்டாவது உத்தியாக அமைவது சிங்களக் குடியேற்றங்களை ஏற்படுத்துவதாகும். கல்லோயா,சேருவில, வெலிஓயா,அல்லைக் கந்தளாய்,பதவிசிறிபுர, மயிலத்தமடு,மாதவனை போன்ற குடியேற்றங்கள் மற்றும் குடியேற்ற முயற்சிகள் இதற்கான உதாரணகங்களாகும்.
மேலும் சிங்களக் குடியேற்றங்களைப் பாதுகாப்பது ஒன்பதாவது உத்தியாகும். இப்படியாக சிங்கள பெளத்த மயமாக்கலை செய்து வரும் சிங்கள அதிகாரவர்க்கமானது நாட்டுக்கும் மக்களுக்கும் நன்மைகள் செய்ததை விட தீமைகளையே அதிகமாக செய்துள்ளது.
நாட்டை 30 ஆண்டுகளாக யுத்தகளமாக மாற்றியமை,தேசிய ஒற்றுமையைச் சிதைத்தமை,நாட்டின் பொருளாதாரத்தை வங்குரோத்து நிலைக்குத் தள்ளியமை, புத்தியாளர்கள் நாட்டை விட்டு வெளியேறச் செய்தமை, பாரிய மனித உரிமை மீறல்களுக்கு வழிகோலியமை,வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமை, சர்வதேச மட்டத்தில் நாட்டுக்கு அவப்பெயரை ஏற்படுத்தியமை, பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் விடயத்தில் உண்மைகள் கண்டறியப்படாமை,நீதி வழங்காமை, இப்பிரச்சினையைத் தீர்க்காமை,குற்றவாளிகள் பாதுகாக்கப்படுதல், பொருளாதாரக் குற்றம் இழைத்தமை, நாட்டின் வளங்களை விற்றமை, இலங்கையை வல்லரசுகளின் போட்டிக்களமாக மாற்றியமை, நவகாலனித்துவத்துள் நாட்டைச் சிக்க வைத்தமை போன்ற பல தீமைகளை சிங்கள ஆட்சியாளர்கள் நாட்டுக்கும் மக்களுக்கும் செய்துள்ளனர்.
சிங்கள பெளத்த மேலாதிக்க ஒற்றையாட்சிப்பொறி முறையே இப்படியான பாதகங்களைச் செய்துள்ளன. இதனை இன்னும் அதிகாரவர்க்கமும், பெளத்த மதத் தலைவர்களும் உணர மறுக்கின்றனர்.இந்த பேரினவாத ஓரினவாத வக்கிர சிந்தனை நாட்டை அழித்துள்ளது.
தேரவாத பெளத்த மதவாதிகள்
அண்மையில் அதிபர் ரணில் விக்ரமசிங்க ஒரு முக்கியமான கருத்தினை முன்வைத்தார். தேரவாத பெளத்தம் உள்ள இலங்கை போன்ற நாடுகளால் அபிவிருத்தி அடைய முடியவில்லை என்றார்.அதாவது தேரவாத பெளத்த மதவாதிகளின் மதவாத இனவாதப் போக்குகள் நாட்டின் அபிவிருத்திக்குத் தடையாக இருப்பதை அதிபர் மறைமுகமாகக் கூறியுள்ளார்.
அதேவேளை நாடு அபிவிருத்தி அடைவதற்கு இனப்பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என்றும் அதிபர் குறிப்பிட்டுள்ளார். ஆயின் இனப்பிரச்சினை தீர்க்கப்படாத வரை இலங்கையில் நிலையான அபிவிருத்தியை அடைய முடியாது என்பதே உண்மையாகும்.
புலம் பெயர்ந்த புத்தியாளர்கள், பொருளாதார வல்லுனர்களின் சேவைகளை இந்த நாடு பெறுவதற்கு ஒரே வழி இனப்பிரச்சினையின் தீர்வாகும்.75 ஆண்டுகளாக இதனை உணராத பிற்போக்குவாத ஆட்சியாளர்கள் தாய்நாட்டுக்கு எதையுமே செய்யவில்லை.
கொள்ளையரின் ஆட்சியை விட வெள்ளையரின் ஆட்சியில் நாட்டின் பொருளாதாரம் பலமாகவே இருந்தது. வெள்ளையர் சுதந்திரத்தைத் தந்தபோது ஆசியாவில் நமது நட்டின் பொருளாதாரம் மூன்றாவது நிலையில் காணப்பட்டது.
தற்போது நம்நாட்டின் பொருளாதாரம் பாதாழத்தில் தள்ளப்பட்டுள்ளது. ஆனால் ஆட்சியாளர்கள் பில்லியனர்களாக கோடீஸ்வரர்களாக மாறியுள்ளார்கள். ஆட்சியரின் சிங்கள மயமாக்கல் பொறிமுறை அரசியல் பொருளாதார ரீதியில் அவர்களுக்கு வெற்றியளித்துள்ளது.
ஆனால் மக்களையும் நாட்டையும் தோல்வியடையச் செய்துள்ளது. மக்களை அடக்குவதற்கு ஆட்சியாளர்கள் பயங்கரமான சட்டங்களைக் கொண்டு வரத் துடிக்கின்றனர். பயங்கரவாதத் தடைச்சட்டத்தை விடுத்து, அதை விட மோசமான பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தைக் கொண்டு வருவதற்கு இந்த ஆட்சியாளர்கள் முனைப்புக் காட்டுகின்றனர்.
ஆட்சியாளர்கள் திருந்தாத வரை ஆளப்டும் மக்கள் வருந்திக்கொண்டே இருப்பார்கள்.'எலிக்குத்தானே மரணம் பூனைக்கு விளையாட்டுத்தானே' என்ற எண்ணத்தில் ஆட்சியாளர்கள் 75 ஆண்டுகள் கழித்துள்ளனர்.
எலிகள் புலிகளாகவும் மாறிய வரலாறுகள் உண்டு என்பதை ஆட்சியாளர்கள் உணர வேண்டும். முப்பதாண்டுகள்கால யுத்தம், அரகலயப்போராட்டம், ஜேவிபியினரின் புரட்சி என்பவை மறக்க முடியாத வரலாற்றுப் பதிவுகளாகும்.
