தேர்தலை நடத்துவதில் சிக்கல் - நீதிமன்ற படியேறும் தேர்தல்கள் ஆணைக்குழு
இலங்கையில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் எதிர்வரும் திங்கட்கிழமை(20) உயர் நீதிமன்றத்தில் நகர்த்தல் பத்திரமொன்றை தாக்கல் செய்யவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தேர்தலை முன்னெடுக்க ஏனைய தரப்பினரிடம் இருந்து போதுமான ஒத்துழைப்பு கிடைக்கவில்லையென குறிப்பிட்டு இந்த நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்யப்படவுள்ளது.

இலங்கையில், உள்ளூராட்சி மன்ற தேர்தலை உரிய வகையில் நடத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதாக கடந்த 10 ஆம் திகதி தேர்தல்கள் ஆணைக்குழு உயர் நீதிமன்றுக்கு உறுதியளித்திருந்தது.
இந்த நிலையில், குறித்த உறுதிமொழியை நிறைவேற்ற முடியாமல் போனமையை சுட்டிக்காட்டி நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்யப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, நிதி இன்மையால் உள்ளூராட்சி மன்ற தேர்தலை உறுதியளிக்கப்பட்ட வகையில், நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக மனுவொன்றின் மூலம் உயர் நீதிமன்றுக்கு அறிவிக்கவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
இதேவேளை, உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பான மேலதிக தீர்மானங்கள் எதிர்வரும் 23 ஆம் திகதிக்கு பின்னர் மேற்கொள்ளப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.