ரஷ்ய தாக்குதல்: கடும் கண்டனம் வெளியிட்ட இலங்கை
ரஷ்யாவின் தலைநகரான மொஸ்கோவில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தை வன்மையாக கண்டிப்பதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதேநேரம், பயங்கரவாதத்துக்கு துணைபோகும் நடவடிக்கைகளை இலங்கை எதிர்ப்பதாகவும் அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ரஷ்யாவின் தலைநகரான மொஸ்கோவில் "பிக்னிக்" எனும் இசைக்குழுவின் கச்சேரியில் நுழைந்த ஆயுததாரிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 115 பேர் இதுவரை உயிரிழந்துள்ள நிலையில், நூற்றுக்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.
கண்டனம்
இந்த தாக்குதல் தொடர்பில் சர்வதேச நாடுகள் கண்டனம் வெளியிட்டு வரும் நிலையில், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சும் தற்போது கண்டனம் வெளியிட்டுள்ளது.
பொதுமக்களுக்கு எதிரான இத்தகைய கோழைத்தனமான வன்முறை சம்பவங்கள் வெறுக்கத்தக்கது என அந்த அமைச்சு கூறியுள்ளது. இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு, பயங்கரவாதம் மற்றும் அதற்கு இணையாக நடத்தப்படும் அனைத்து செயல்பாடுகளும் கண்டிக்கப்பட மற்றும் அழிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
அத்துடன், பயங்கரவாதத்திற்கு எதிரான உலகளாவிய போருக்கான தனது உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்திய இலங்கை, அமைதி மற்றும் பாதுகாப்பிற்கான பாரிய அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள சர்வதேச சமூகத்துடன் இணைந்து செயல்பட தயாராக உள்ளதாக அறிவித்துள்ளது.
இரங்கல்
அத்தோடு இந்தத் தாக்குதலுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதனுடன் இந்தத் தாக்குதல் வெறுக்கத்தக்க மற்றும் கோழைத்தனமான பயங்கரவாத தாக்குதலாக கருதப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இந்த சோகமான நேரத்தில் ரஷ்யாவுடன் தான் நிற்பதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
அத்துடன் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் மற்றும் இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி ஆகியோர் உயிரிழந்தவர்களுக்கும் மற்றும் ரஷ்ய அரசுக்கும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இந்த தாக்குதலை கண்டித்து ஆப்கானிஸ்தான், கியூபா, ஜேர்மனி, ஜப்பான், அமெரிக்கா மற்றும் வெனிசுவேலா ஆகிய நாடுகளும் இரங்கல் அறிக்கைகளை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |