இலங்கையில் 400 ரூபாவாக அதிகரிக்கும் டொலரின் பெறுமதி : எச்சரிக்கும் முன்னாள் ஆளுநர்
சஜித் பிரேமதாச (Sajith Premadasa) ஆட்சிக்கு வந்துவிட்டால் 1.4 பில்லியன் டொலர்கள் இந்த நாட்டிற்கு இல்லாமல் போய்விடுவதுடன் டொலரின் பெறுமதி 400 ரூபாவாக அதிகரிக்கும் என தேசிய ஐக்கிய முனனணியின் தலைவரும் முன்னாள் மேல்மாகாண ஆளுநருமான அசாத் சாலி (Azath Salley) தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், “ஆறு தடவை பிரதம மந்திரியாக வந்த ரணில் விக்ரமசிங்கவிடம் (Ranil Wickremesinghe) நாட்டைக் கொடுப்பதன் மூலம் முன்னோக்கிக் கொண்டுசெல்ல முடியும். அவரிடம் தான் அதற்கான அனுபவம் உண்டு.
இலங்கைக்கு உதவி
பாகிஸ்தான் (Pakistan) வங்குரோத்தடைந்த நிலையில் தற்போது தான் ஐஎம்எப் (IMF) உதவி செய்வதற்காக போயுள்ளது. ஆனால் இலங்கை வங்குரோத்தடைந்து குறுகிய காலத்திலேயே ஐஎம்எப் விரைவாக வந்து உதவி வழங்கியது.
தற்போது இந்தப் பிரச்சினை இருக்கின்ற காலகட்டத்தில் கூட உலக வங்கி (World Bank), ஐஎம்எப், ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) என்பவற்றால் 1.2 பில்லியன் வரவேண்டியிருக்கின்றது.
ரணில் விக்ரமசிங்கவை தோற்கடித்து விட்டு சஜித் பிரேமதாச ஆட்சிக்கு வந்துவிட்டால் 1.4 பில்லியன் டொலர்கள் இந்த நாட்டிற்கு இல்லாமல் போய் விடும். அந்தப் பணம் இல்லாமல் போய்விட்டால் டொலரின் பெறுமதி 400 ரூபாவிற்கு வந்துவிடும். மீண்டும் இந்த நாடு நெருக்கடிக்குள் தள்ளப்படும்.
பங்களாதேஷ் வழங்கிய கடன்
வேறு ஒருவர் ஜனாதிபதியாக வந்தால் புதிய அமைச்சரவையை ஏற்படுத்துவதற்கு தேவையான மூன்று மாத காலத்தில் நாடு மோசமான நிலைமைக்கு போய்விடும். அத்துடன் கடனைச் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் நாடு இருக்கின்றது.
இலங்கை வங்குரோத்தடைந்த பொழுது முதன்முதலில் கைகொடுத்த நாடு பங்களாதேஷ் (Bangladesh) தான். 400 மில்லியன் கடனை வழங்கியது இப்போது அந்தக் கடன் திருப்பிக் கொடுக்கப்பட்டுள்ளது.
வாங்கிய கடனைக் கொடுக்க வேண்டும், நாட்டின் பெயரைக் காப்பாற்ற வேண்டும் என நினைக்கின்ற தலைவர் ரணில் விக்ரமசிங்கவே” என தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான மேலும் பல விடயங்களை கீழுள்ள காணொளியில் காண்க...
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |