பிரான்ஸிலிருந்து நாடுகடத்தப்பட்ட இலங்கைத்தமிழர்கள்
இலங்கைத் தமிழர்கள் நாடு கடத்தல்
சட்டவிரோதமான முறையில் சென்று பிரான்ஸின் ரீயூனியன் தீவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 7 இலங்கைத் தமிழர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த 7 பேரை தடுத்து வைத்திருக்கும் காலம் முடிவுக்கு வந்த நிலையில் கடந்த வாரம் விமானம் ஒன்றின் மூலம் அவர்கள் கொழும்பிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த மாதம் 17ஆம் திகதி படகு மூலம் சட்டவிரோதமாக பிரான்ஸிற்கு வந்த 46 இலங்கையர்களில் 7 பேரே இவ்வாறு நாடு கடத்தப்பட்டதாக பிரெஞ்சு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
39 ஆண்கள், 5 பெண்கள் மற்றும் 2 சிறுவர்கள், தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் இரண்டு வாரங்களுக்கு பின்னர் வெளியேற அனுமதி வழங்கப்பட்டது. தடுப்பு காவலின் பின்னர் அவர்களை புகலிடம் கோருவதற்கு விண்ணப்பிப்பதற்கு மேல்முறையீட்டு நீதிமன்றம் அனுமதி வழங்கியதுடன், தடுப்பு காவலுக்கு முற்றுப்புள்ளி வைக்குமாறும் உத்தரவிடப்பட்டது.
எனினும் சிறிய தவறு காரணமாக இவர்களில் 7 பேரின் கோரிக்கை மீளப்பெறப்பட்டுள்ளது. அவர்களின் வழக்கறிஞர்கள் மேல்முறையீடு செய்தனர். எனினும் மொழி பெயர்ப்பு சிக்கலால் அவர்களின் கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்படவில்லை. தமிழர்களான ஏழு பேரும் மீண்டும் நிர்வாக நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த போதிலும் நீதிமன்றம் அவர்களது கோரிக்கையை நிராகரித்தது. இதன் காரணமாக அவர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
சிறிய தவறால் ஏற்பட்ட நிலை
அவர்கள் திருப்பி அனுப்பப்படும் வரை விமான நிலையம் ஒன்றில் தடுப்பு காவலில் வைக்கப்பட்டனர். குறித்த இலங்கையர் குழுவினர் பிரான்ஸிற்குள் எவ்வாறு வந்தனர் என்பது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மனித கடத்தலில் ஈடுபடும் குழுவொன்றின் அனுசரணையில் இவர்கள் பிரான்ஸிற்குள் வந்தார்கள் என்பது தொடர்பில் கண்டறியப்படவுள்ளதுடன் அவர்களின் அடையாளங்களையும் பகிரங்கப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
