ஹமாஸ் அமைப்பிடம் சிக்கிய இலங்கையர்கள்...!
இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திய ஹமாஸ் அமைப்பினர் நூற்றுக்கும் மேற்பட்டவர்களை பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்ற நிலையில் அவர்களில் இலங்கையர்களும் அடங்குவதாக இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.
இவ்வாறு பிணைக்கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டவர்களில் 27 இலங்கையர்கள் உள்ளதாக தெரிவித்த அவர்,காசாவின் வடக்கு பகுதியிலிருந்து காசாவின் தெற்கு பகுதிக்கு அவர்கள் பயணிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
காசாவின் தெற்கு பகுதிக்கு இடம்பெயரும் இலங்கையர்கள்
அத்துடன் காசாவில் வசிக்கும் மக்களுடன் இந்த குழு எகிப்து செல்ல திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
"தற்போது, காசாவின் வடக்குப் பகுதியில் வாழும் மக்கள் தெற்குப் பகுதிக்கு இடம்பெயர்ந்து வருகின்றனர். அவர்களில் 27 இலங்கையர்கள் உள்ளதாக பலஸ்தீன அலுவலகத்தில் உள்ள எமது பலஸ்தீன பிரதிநிதி தெரிவித்துள்ளார்.
27 பேரும் எகிப்துக்கு அடுத்ததாக பயணம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. என அவர் குறிப்பிட்டார்.
ஹமாஸ் அமைப்பிடம் சிக்கிய 150 வெளிநாட்டவர்கள்
இதற்கிடையில், சுமார் 150 இஸ்ரேலியர்கள் மற்றும் வெளிநாட்டவர்கள் ஹமாஸ் அமைப்பிடம் பிணைக்கைதிகளாக இருப்பதாக செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்ட அனைவரின் விவரங்களையும் அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இவர்களில் இலங்கையர்கள் உட்பட 36 நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டவர்களும் அடங்குவதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அந்த விவரங்கள் கிடைத்தால், அந்த இடத்தில் காணாமல் போன எங்கள்நாட்டவர் இருவரைப் பற்றிய தகவலைப் பெற முடியும் என்று நான் நினைக்கிறேன்." என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.