கிளிநொச்சியில் பெண் 7 பேரால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை - போராடிய மக்களை மிரட்டிய காவல்துறை - சபையில் அம்பலப்படுத்திய எம்.பி
கிளிநொச்சி – சாந்தபுரம் பகுதியில் 7 பேரால் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட பெண்ணுக்கு நியாயம் கோரியும், சம்பந்தப்பட்டவர்களைக் கைது செய்ய வலியுறுத்தியும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டபோது; காவல்துறையினர் அதற்கு இடையூறு ஏற்படுத்தி, நியாயம் கோரிய மக்களின் போராட்டத்தைத் தடுத்ததன் நோக்கம் என்னவென இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கேள்வி எழுப்பினார்.
நாடாளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (20.11.2026) இடம்பெற்ற வரவு செலவுத் திட்டம் மீதான 7 ஆம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு கேள்வி எழுப்பிய சிறீதரன் எம்.பி.,
மேலும் பேசுகையில்; “கிளிநொச்சி மாவட்டம் சாந்தபுரம் கிராமத்தில் பெண் ஒருவர் 16 முதல் 23 வயதுக்குட்பட்ட 7 இளைஞர்களால் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். அப்பெண் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கூட்டுப் பாலியல் படுகொலை
இந்த மாதம் 11 ஆம் திகதி (11.11.2026) இடம்பெற்ற இச்சம்பவம், கிளிநொச்சி மாவட்டத்தில் மாத்திரமல்ல முழு நாட்டிலும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. புங்குடுதீவு வித்தியா கூட்டுப் பாலியல் படுகொலைச் சம்பவத்திற்குப் பின்னர், தற்போது இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சாந்தபுரம் மக்கள் இச்சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து நியாயம் கோரிப் போராட்டத்தில் ஈடுபட்ட போது, காவல்துறையினர் அதற்கு இடையூறு ஏற்படுத்தியுள்ளனர்.
நியாயத்தைக் கோரிய போராட்டத்தைப் காவல்துறையினர் தடுக்கும் நோக்கம் என்ன? கூட்டுப் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட 7 பேரையும் கைது செய்ய வேண்டும், அவர்களுக்காகச் சட்டத்தரணிகள் எவரும் முன்னிலையாகக் கூடாது என்பவற்றை வலியுறுத்தியே சாந்தபுரம் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்ததன் பின்னர், சாந்தபுரம் மக்களைக் குடியேற்றம் செய்ய இராணுவத்தினரும், அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் மறுத்தனர். சாந்தபுரம் மக்கள் விவசாயத்தை முன்னிலைப்படுத்தி வாழ்ந்து வருகிறார்கள்.
திட்டமிட்ட போதைப்பொருள் பாவனை
இம்மக்களைக் குடியேற்றம் செய்ய அப்போதைய அரசாங்கம் மறுப்புத் தெரிவித்தபோதிலும், அம்மக்கள் உறுதியாக இருந்தனர். கொழும்பிலும், யாழ்ப்பாணத்திலும் இயங்கிய 'தினக்குரல்' பத்திரிகையின் செயற்பாடுகளும் இம்மக்களை மீள்குடியேற்றம் செய்வதற்குப் பெரிதும் பங்களிப்புச் செய்தன.

இதன் பின்னரே அம்மக்கள் சாந்தபுரம் பகுதியில் குடியமர்த்தப்பட்டனர். இதன் வெறுப்பு இன்றும் காவல்துறையினர், பாதுகாப்புத் தரப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவுக்கு மத்தியில் உள்ளது.
சாந்தபுரம் மக்கள் போருடனும், போர் வடுக்களுடனும் வாழ்ந்தவர்கள். இன்றும் இம்மக்கள் திட்டமிட்ட போதைப்பொருள் பாவனைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.
சாந்தபுரம் கூட்டுப் பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பில் உரிய சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க அரசாங்கம் தயங்குகின்றது; காவல்துறையினர் அசமந்தப் போக்குடன் செயற்படுகிறார்கள்” என்றார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |