தமிழ் பொது வேட்பாளர்! தனது நிலைப்பாட்டை கூறினார் சிறீதரன்
அதிபர் தேர்தலில் களமிறங்குவார்களென எதிர்பார்க்கப்படுபவர்கள் தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வுடன் எந்த விடயங்களிலும் கரிசனைகளைக் கொண்டவர்களாக தம்மை வெளிப்படுத்தவில்லையென இலங்கைத் தமிழரசுக்கட்சியின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் அதிபர் தேர்தலில் தமிழ்க் கட்சிகளின் சார்பில் பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்துவதற்கான முயற்சிகள் தொடர்பில் கருத்து வெளியிடும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “அதிபர் தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளர் நிறுத்தப்படுவதற்கு கொள்கையளவில் இணக்கம் தெரிவிக்கும் அதேநேரம் கட்சியின் தீர்மானமும் முக்கியமானது.
அதிபர் தேர்தல்
தற்போதைய நிலையில் அதிபர் தேர்தலில் களமிறங்குபவர்கள் தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வு உட்பட எந்தவொரு விடயங்களிலும் கரிசனைகளைக் கொண்டவர்களாக தம்மை வெளிப்படுத்தவில்லை.
ஆகையால் எந்த அடிப்படைகளுமின்றி தென்னிலங்கை வேட்பாளர்களை ஆதரிப்பது பொருத்தமற்றதொரு முயற்சியாகும்.
தமிழரசுக்கட்சி
இந்நிலையில் தமிழ் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து பொதுவேட்பாளரை நிறுத்துகின்றமை பொருத்தமான அணுகுமுறையாகும்.
அந்த முயற்சிக்கு நான் கொள்கை அளவில் இணக்கம் தெரிவிப்பதோடு இலங்கைத் தமிழரசுக்கட்சியினுள் இந்த விடயம் சார்ந்து கலந்துரையாடி கட்சியாக தீர்மானம் எடுக்க வேண்டியது மிகவும் முக்கியமானதாகின்றது.
ஆகையால் குறித்த விடயம் சம்பந்தமாக கட்சியாக கூடி ஆராய்ந்து தீர்மானிக்கப்பட வேண்டியது அவசியம்” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |