சீனாவை விட இந்தியாவே முக்கியம்! திட்டவட்டமாக கூறிய டக்ளஸ்
இந்தியா கேட்கிறது என்பதற்காக கச்சதீவை வழங்கினாலும் பிரச்சனை தீரப் போவதில்லை என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் கடற் தொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது கட்சி தலைமையகத்தில் நேற்று(11) வியாழக்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், வடக்கில் சீனாவை விட இந்தியாவின் உறவை விரும்பும் நிலையில் கச்சதீவை இந்தியாவுக்கு வழங்கினால் இந்திய கடற்தொழிலாளர்களின் எல்லை தாண்டிடும் பிரச்சனை தீரப் போவதில்லை.
கடற்தொழிலாளர்கள் பிரச்சனை
ஒருவேளை கச்சதீவை இந்தியாவுக்கு வழங்கி விட்டால் இந்தியா கடற்தொழிலாளர்கள் அதன் எல்லையில் இருந்து ஒரு கடல் மைல் எல்லைக்கு அப்பால் சென்று மீன் பிடிக்க முடியாது.
அதேபோல இலங்கை கடற்தொழிலாளர்களும் ஒரு கடல் மைலுக்கு அப்பால் எல்லையைத் தாண்டி மீன் பிடிக்க முடியாது. பிரச்சனை அதுவல்ல.
இந்திய கடற்தொழிலாளர்கள் யாழ்குடா கடற்பிரப்பில் கரைக்கு வருகை தந்து மீன் பிடிக்கிறார்கள் அதைத் தடுப்பதற்கு இது நாட்டு தலைவர்களுடனும் இராஜதந்திர ரீதியான பேச்சுவார்த்தை வேண்டும்.
கச்சதீவு 1974 ஆம் ஆண்டு தொடக்கம் இருநாட்டு கடற்தொழிலாளர்களும் சுதந்திரமாக மீன்பிடிக்கும் இடமாக காணப்பட்ட நிலையில் 1976 ஆம் ஆண்டு இரு நாடுகளும் இணைந்து ஒரு ஒப்பந்தத்தின் பிரகாரம் இலங்கையிடமும் ஒப்படைக்கப்பட்டது.
கச்சதீவை இலங்கை பெற்றதால் கச்சதீவு போல் வளமான 80 மடங்கு கடலை இந்தியாவுக்கு தாரை வார்த்து விட்டோம் என்றார்.
சீனாவின் திட்டம்
இந்நிலையில் தீவகப் பகுதிகளில் இந்தியாவின் மீள் புதுப்பிக்க சக்தி திட்டம் இடம் வருகிறது சீனாவின் திட்டம் என்றால் எதிர்ப்பு வருவது ஏன் என ஊடகவியலாளரால் கேள்வி எழுப்பினார்.
இதன் போது பதில் அளித்த அமைச்சர் டக்ளஸ் முதலில், தீவகத்தில் மீள் புதுப்பிக்க சக்தி திட்டத்தை சீனா தமக்கு வழங்குமாறு கோரிக்கை முன்வைத்தது. நான் அமைச்சரவையில் அதனை மறுத்து இந்தியாவுக்கு வழங்குங்கள் என கோரிக்கை விடுத்தேன்.
நான் அவ்வாறு கோரிக்கை முன்வைத்ததற்கான காரணம் என்னவெனில் எமக்கு கிடைக்கின்ற அபிவிருத்தி திட்டங்களை தடுக்காது அதனை மக்கள் அபிவிருத்தி ஆக்குவதே எனது நோக்கம்.
வட மாகாணத்தை பொருத்தவரையில் சீனாவைக் காட்டிலும் இந்தியாவின் திட்டங்களை மக்கள் எதிர்க்க மாட்டார்கள் அதற்கு பல காரணங்கள் இருக்கிறது.
தொப்புள் கொடி உறவு
இலங்கை இந்தியா உறவுக்கு அப்பால் தமிழ் மக்களுக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் இடையிலான தொப்புள் கொடி உறவு நம்பிக்கையானது. அதன் காரணமாகவே எல்லை தாண்டும் கடற்தொழிலாளர்கள் பிரச்சனையையும் பேசி தீர்ப்பதற்காக புதுச்சேரி மாநில முதல்வர் அழைப்பு விடுத்துள்ளார்.
அங்கு தேர்தல் இடம்பெற உள்ளதால் தற்போதைக்கு செல்வதற்கான ஏற்பாடுகள் இல்லை தேர்தல் முடிவுகள் அரசாங்கம் ஒன்று அமைந்ததன் பின்னர் பேசலாம் என எண்ணி இருக்கிறேன்.
ஆகவே கச்ச தீவை இந்தியாவுக்கு வழங்கினால் பிரச்சனை தீர்ந்து விடும் என நினைப்பது தவறு குறித்த விடயம் இராஜதந்திர ரீதியில் தீர்க்க வேண்டிய விடயம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |