கொலைக்குற்றவாளிக்கு வாக்களிக்க கோரும் முதுகெலும்பில்லாத தமிழரசுக் கட்சி
தமிழ் இனப்படுகொலைக்காக அனைத்துலக நீதிமன்றத்திலே நீதி கோரக்கூடிய தமிழ் மக்கள் ஒரு கொலைக்காரனுக்கு வாக்களிப்பதற்கு தமிழரசுக் கட்சியால் வழிநடத்தப்படுவது என்பது மிகத்தவறான ஒரு விடயமாகும் என யாழ்ப்பாண பல்கலைக்கழக (University of Jaffna) மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
குறித்த விடயத்தை தமிழ்த் தேசிய பொது வேட்பாளர் பா.அரியநேத்திரனை (P. Ariyanethiran) ஆதரித்து இன்று (17) யாழ்ப்பாணத்தில் (Jaffna) நடத்திய ஊடக சந்திப்பின் போதே பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மாணவர் ஒன்றியம் மேலும் தெரிவிக்கையில், “தமிழ் மக்களிடையே பொது எதிரிகளாக கருதப்படக்கூடிய ராஜபக்சவினர் முதன்மை வேட்பாளராக இல்லாத சூழலிலே தற்போது தமிழ் மக்களுக்கு யாருக்கு வாக்களிப்பது என்பது தொடர்பில் குழப்பகரமான சூழல் ஏற்பட்டுள்ளது.
தென்னிலங்கை தரப்புக்கள்
இதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு தென்னிலங்கை தரப்புக்கள் பொருளாதாரம் மற்றும் நல்லிணக்கம் போன்ற மாயை காட்டி தமிழ் மக்களின் வாக்குகளை தங்கள் பக்கம் சுருட்டுவதற்கு கங்கனம் கட்டிக்கொண்டு திரிகின்றனர்.
நாட்டினுடைய பொருளாதார வங்குரோத்திற்கு காரணம் தமிழ் மக்கள் மீது நிகழ்த்தப்பட்டுள்ள ஆக்கிரமிப்புக்களும் மற்றும் வலிந்து திணிக்கப்பட்ட போரும்தான்.
இருப்பினும், இதனை சிங்கள ஆட்சியாளர்கள் இன்று மட்டிலும் ஏற்றுகொள்ள தயாராக இல்லை இவ்வாறான சூழலில் தமிழ் மக்களுக்கு சரியான தீர்வு தராமல் நல்லிணக்கம் என்ற போர்வையிலேயே அவர்கள் இங்கு வந்து செல்கின்றார்கள்.
சிங்கள மக்களிடையே ஒரு தலைவர் தோன்றி தமிழ் மக்களுக்கான ஒரு தீர்வை பெற்றுத்தருவார் என்பதில் எங்களுக்கு ஒரு துளியும் நம்பிக்கையில்லை.
தமிழ் பொது வேட்பாளருக்கு உரிமை கோரும் செயற்பாட்டை சிலர் முன்னெடுத்து வருகின்றனர் இந்தநிலையில் அவ்வாறான சாயலுக்கு பொதுக்கட்டமைப்பு செல்லாமல் இருக்க வேண்டும்.
13 ஆம் திருத்தச்சட்டத்தில் தமிழ் மக்களை சுருக்ககூடிய எந்தவொரு திட்டத்திற்கும் தமிழ் பொதுக்கட்டமைப்பு தலைசாய்க்க கூடாது என நாங்கள் கோரிக்கை முன்வைக்கின்றோம்.
தமிழ் பொது வேட்பாளர்
தமிழ் பொது வேட்பாளர் பிழை என பலகீனப்படுத்தும் செயற்பாடானது ஒட்டு மொத்த தமிழ் சமூகத்தையும் பலகீனப்படுத்தும் செயற்பாடாகும்.
எந்தவொரு பேச்சு வார்த்தைகளும் சரியான கலந்துரையாடலும் இல்லாமல் ஒரு சிங்கள, பௌத்த பேரினவாத முகவருக்கு தமிழரசுக்கட்சி வாக்களிக்க முடிவெடுத்துள்ளது.
சமஷ்டி அடிப்படையில் தேர்தல் விஞ்ஞாபனத்தை முன்வைக்கும் தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவளிப்பதாக கூறி விட்டு தற்போது எந்த அடிப்படையில் அவர்கள் சஜித்திற்கு (Sajith Premadasa) ஆதரவளித்தார்கள் என்பது தொடர்பில் மக்களுக்கு தமிழரசுக் கட்சி தெளிவுப்படுத்த வேண்டும்.
எதனை அடிப்படையாகக்கொண்டு கண்ணை மூடிக்கொண்டு சஜித் பிரேமதாவிற்கு வாக்களிக்க ஒப்புகொண்டனர்.
தேர்தலில் சஜித்திற்கு ஏன் வாக்களிக்க வேண்டும் என தமிழரசுக்கட்சியில் வெளியிடப்பட்ட அறிக்கையில் ஏன் சஜித்திற்கு வாக்களிக்க வேண்டும் என்பது முறையாக எங்கும் முன்வைக்கப்படவில்லை.
தமிழ் பொது வேட்பாளர் நிறுத்தப்பட்டுள்ள இந்த சூழ்நிலையில் அவரை தோற்கடித்தே தீருவோம் என ஒரு தமிழ் கட்சி கங்கணம் கட்டிகொண்டு தமிழ் பொதுவேட்பாளருக்கு எதிராக சுமத்திரன் (M. A. Sumanthiran) செயற்பட்டு கொண்டு இருக்கின்றார்.
தனிநபர் நாட்டாமை
கட்சியின் தீர்மானமே உத்தியோகப்பூர்வாகமாக நேற்றையதினம்தான் வருகின்றது இருப்பினும் அதற்கு முன்பதாகவே இன்னொரு கட்சியின் வேட்பாளருக்கு சுமந்திரன் நடவடிக்கை எடுத்துள்ளார் என்றால் அதனை தட்டிக்கேட்க எந்தவொரு முதுகெழும்புள்ள தமிழரசுக்கட்சியினருக்கும் திராணி உள்ளதா ?
தமிழரசுக்கட்சியில் ஒரு தனிநபர் நாட்டாமை செய்வதை எவ்வாறு மத்திய குழு உறுப்பினர்கள் பார்த்துகொண்டு இருக்கின்றார்கள் என்பதை அவர்கள் மக்களுக்கு தெளிவுப்படுத்த வேண்டும்.
தமிழரசுக்கட்சியின் தலைவர் மாறி மாறி வேட்பாளருக்கு ஆதரவாக கருத்துக்கள் தெரிவித்து வருகின்றார் ஒரு கட்சியின் தலைவருக்கே தான் என்ன செய்கின்றோம் என்று தெளிவில்லை.
முதுகெம்புள்ள ஒரு தலைமை தமிழரசுக்கட்சிக்கு இல்லை, தான் சொன்னால் தமிழ் மக்கள் வாக்களிப்பார்கள் என தமிழரசுக்கட்சி சிந்திக்கின்றனர்.
சுமந்திரன், தமிழ் மக்கள் கூட்டமைப்பை சிதைத்தார் தற்போது தமிழரசுக்கட்சியை சுக்குநூறாக உடைத்து நீதிமன்ற வாசலில் நிறுத்தியுள்ளார் அவருக்கு வந்த வேளை முடிந்தது.
தமிழரசுக்கட்சியில் சகுனி வேலை செய்து கட்சியை முற்றிலும் அளித்தவர் சுமந்திரன். எனவே, இப்படிப்பட்ட கட்சியின் சிந்தனைக்கு செவிசாய்க்காமல், தமிழ் மக்கள் நம் இனத்திற்காக தமிழ் பொது வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும்” என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பான மேலும் பல தகவல்களை அறித்துக்கொள்ள கீழுள்ள காணொளியை பார்வையிடவும்,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |