கோட்டாபயவின் தன்னிச்சையான செயற்பாட்டால் நாட்டில் பஞ்சம் ஏற்படும் அபாயம்!
உரம் தொடர்பாக ஜனாதிபதி தன்னிச்சையாக தீர்மானம் எடுத்துள்ளதாக கிழக்கு மக்களின் குரல் அமைப்பின் செயற்பாட்டாளர் அருண் ஹேமச்சந்திரா குற்றம்சாட்டியுள்ளார்.
திருகோணமலையில் உள்ள அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் மேலும் அவர் தெரிவிக்கையில்,
இலங்கையில் பாரிய அளவிலான மக்கள் இன்று விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனாலும் அவர்களது விவசாயத் தேவைகளுக்கான உரங்கள் சீராக வழங்கப்படாத பட்சத்தில் நாட்டில் பஞ்சம் ஏற்பட கூடிய சாத்தியக்கூறு நிலவுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
எந்தவித விஞ்ஞான ரீதியான ஆய்வும் இல்லாமல் ஜனாதிபதியின் தன்னிச்சையான தீர்மானத்தால் நாட்டில் உர இறக்குமதியானது தடை செய்யப்படும் நிலைமை காணப்பட்டு வருகின்றது. ஆனாலும் திடீரென இதனை நிறுத்தி எந்தவிதமான மாற்றீடுகளும் இல்லாமல் இவ்வாறான செயற்பாட்டை செய்வது நல்லதொரு விடயம் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
மக்கள் பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்ற இக் காலகட்டத்தில் விலை ஏற்றமும் மக்கள் மத்தியில் பாரிய நெருக்கடிகளை ஏற்படுத்தியுள்ளது எனவும் தெரிவித்தார். மேலும் மேற்கு கடல் பிராந்தியத்தில் எரிந்து தற்போது மூழ்கிக்கொண்டிருக்கும் எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலின் மூலமாக பாரிய சுற்றுச்சூழல் மாசு ஏற்பட்டுள்ளது.
இதனை அண்மையில் இலங்கைக்கு வந்து ஆய்வு நடத்திய நிபுனர்குழுவும் தெரிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்ட அதே வேளை, தொடர்ச்சியாக இலங்கை கடற்கரைப்பரப்பில் இறந்த நிலையில் பல கடல் வாழ் உயிரினங்கள் கரை ஒதுங்கி வருவதை அவதானிக்க கூடியதாக இருக்கிறது.
நாட்டின் மேற்கு பகுதியில் மாத்திரம் நடைபெற்ற இவ்வாறான சம்பவங்கள் தற்போது மன்னார் மற்றும் கிழக்கு மாகாணத்தில் கூட நடைபெற்று வருவது மிகுந்த வேதனை அளிப்பதாக அவர் தெரிவித்த அதே வேளை இதற்கு அரசு முழுவதும் பொறுப்பேற்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.