அடுத்த ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி
அரச வருமான அதிகரிப்பை இலக்காகக்கொண்டு எதிர்வரும் வருடத்துக்கான வரவு - செலவுத் திட்டத்தை ஏற்பாடு செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று இடம்பெற்றபோது அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் பந்துல குணவர்தன இதனை தெரிவித்தார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
அரச வருமான அதிகரிப்பு
“அரச வருமானத்தை 11.3 சதவீதமாக அதிகரிப்பதை இலக்காகக்கொண்டு 2023 ஆம் ஆண்டிற்கான வரவு - செலவுத் திட்ட மதிப்பீடுகளை தயாரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டெழுவதற்கு அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரிக்கவேண்டும்.
இதுதொடர்பான கொள்கை குறித்து முக்கியத்துவம் அளிக்கவேண்டிய விடயங்கள் தொடர்பில் தெளிவுபடுத்தப்பட்டது. இதன் அடிப்படையில் அரச தொழில் முயற்சியாண்மை மறுசீரமைப்பு மேற்கொள்ளவேண்டும்.
நாட்டைக் கொண்டுசெல்வதில் சிக்கல்
நட்டத்தில் இயங்கும் அரச நிறுவனங்கள் அரசியலமைப்பின்கீழ் உருவாக்கப்பட்ட சபைகளை மறுசீரமைப்பதன் மூலம், நட்டமடையும் சில நிறுவனங்களை மூடுதல் அல்லது வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிட்டால், எம்மால் இந்த நாட்டை தொடர்ந்தும் கொண்டுசெல்ல முடியாது” என்றார்.
