நாட்டின் சட்டத்தை மீறி செயற்படும் ஸ்ரீலங்கா குற்றப்புலனாய்வுப் பிரிவு!
குற்றப்புலனாய்வு பிரிவு நாட்டின் சட்டத்தை மீறி செயற்படுவதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தால் விளக்கமறியலில் வைக்கப்பட்ட சந்தேக நபருக்கு தடுப்புக்காவல் உத்தரவைக் கோரி குற்றப்புலனாய்வு திணைக்களம், சட்டத்தில் இல்லாத விதிகளை செயற்படுத்த முனைவதாக கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் அமைப்பு தெரிவித்துள்ளது.
இலங்கை சட்டத்திற்கு அமைய நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்படும் ஒருவரை குற்றப்புலனாய்வு பிரிவு அல்லது நிர்வாகத் துறையின் தடுப்புக் காவலில் வைக்க எவ்வித ஏற்பாடுகளும் இல்லை என சட்டத்தரணி சேனக பெரேரா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழுவின் தலைவரான சட்டத்தரணி சேனக பெரேரா இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். அண்மையில் கைது செய்யப்பட்ட பல்லேவத்த கமகே சமிந்த தில்ருக் என்ற சந்தேக நபர், கடுவளை நீதவான் நீதிமன்றத்தால் விளக்கமறியலில் வைக்கப்பட்டதோடு, குற்றப்புலனாய்வு திணைக்களம் தடுப்புக்காவல் உத்தரவைக் கோரியதாக சட்டத்தரணி சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறு, இல்லாத ஒரு சட்ட விதியின் ஊடாகவே, குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கடந்த காலங்களில் இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பதை தாம் அறிவதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அரசாங்கமும் பொலிஸாரும் நாட்டின் சட்டதிட்டங்களுக்கு அமைவாகவே செயற்பட வேண்டும். மூன்றாம் தரப்பின் தேவைகளுக்காக வழங்கப்பட்டிருக்கும் அதிகாரங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுமானால், அதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமுடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.
தடுப்புக்காவல் உத்தரவின் பேரில் பொலிஸ் காவலில் இருந்த தாரக தர்மகீர்த்தி விஜேசேகர அல்லது கொஸ்கொட தாரகவின் உயிருக்கு அச்சுறுத்தல் காணப்படுவதாக, பொலிஸ்மா அதிபருக்கு அவரது சட்டத்தரணியால் அறிவுறுத்தப்பட்டிருந்த நிலையில், சந்தேகநபர் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார்.
தினெத் மெலன் மாம்புலா என்ற சந்தேக நபர் பொலிஸ் காவலில் இருந்த சமயத்தில் கொல்லப்பட்டார். கைதிகளின் உயிருக்கு தொடர்ந்து ஏற்படும் ஆபத்தை முடிவுக்குக் கொண்டுவர உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கைதிகளின் உரிமைகள் பாதுகாக்கும் அமைப்பு அதிகாரிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
தாரக தர்மகீர்த்தி விஜசேகர மற்றும் தினெத் மெலன் மாம்புலா ஆகியோர் ஆயுதங்களைக் காட்ட அழைத்துச் செல்லப்பட்ட சந்தர்பத்தில், சட்டவிரோதமாக கொலை செய்யப்பட்ட நிலையில், மேலும் மூன்று பேரின் உயிரிழப்புகள் குறித்து, பொலி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.