தடுமாற்றமடைந்துள்ளதை மூடிமறைக்கவே பழிவாங்கும் நடவடிக்கையில் அரசாங்கம்!
சிறிலங்கா எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்தால் சுமார் மூன்றரை மணிநேரம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
கடந்த நல்லாட்சி அரசாங்க காலத்தில் மெகாபொலிஸ் அமைச்சின் கீழ் மேற்கொண்ட பிரசாரங்களுக்கு செலவழிக்கப்பட்ட நிதிக்கணக்கு தொடர்பாக கிடைத்த முறைப்பாட்டிற்கு அமைவாக அவரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
சிறிலங்கா குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் பாட்டலி சம்பிக்க ரணவக்கவிடம் இன்றைய தினம் சுமார் மூன்றரை மணிநேரம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டிருந்தது. இதன்போது குற்றப்புலனாய்வு திணைக்கள வளாகத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, நாடாளுமன்ற உறுப்பினர்களான, நளின் பண்டார, கபிர் ஹாசிம், ஹர்ச டி சில்வா, மனுச நாணயக்கார உள்ளிட்டவர்கள் பிரசன்னமாகியிருந்தனர்.
விசாரணை முடிவடைந்த பின்னர் சம்பிக்க கருத்துத் தெரிவிக்கையில்,
இன்று ஆசிரியர்கள், அதிபர்களின் தொலைபேசி அழைப்புகள் ஒட்டுக் கேட்கப்பட்டு இங்கு அழைக்கப்படுகின்றனர். தமக்கு எதிராக செயற்படுகின்றவர்களை அடக்குவதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றது. இது தொடர்பில் நாம் அச்சமடையப்போவது இல்லை.
நாங்கள் தீவிரவாதம் உள்ளிட்ட அனைத்து விடயங்களுக்கு எதிராக எப்போதும் முன்னின்றோம். இந்த அடக்குமுறைக்கு நாம் பணியப்போவது இல்லை. எமது அமைச்சின் அதிகாரிகளை பழிவாங்க வேண்டாம். முடிந்தால் எம்மை பழிவாங்குங்கள்.
அதனை நாம் ஏற்றுக்கொள்கின்றோம். எமது அமைச்சில் இருந்தவர்களுக்கு தொல்லை தராதீர்கள். இதனை நிறுத்தி, நேருக்கு நேர் எம்முடன் மோதுங்கள். எமது அமைச்சில் இடம்பெற்ற விடயங்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்காகவே அழைத்துள்ளார்கள். தடுமாற்றத்தை எதிர்நோக்கியுள்ள அரசாங்கம் அதனை மூடிமறைக்க பல செயற்பாடுகளை முன்னெடுக்கின்றது எனவும் தெரிவித்துள்ளார்.