நாட்டை நிர்வகிக்க முடியாத நிலையில் ராஜபக்ஷக்கள்- மக்களின் வாழ்க்கையுடன் விளையாட வேண்டாம்!
ஸ்ரீலங்க அரசாங்கத்தின் செயற்பாடானது நாட்டு மக்களின் உயிர்களை கொரோனாவிற்கு காவு கொடுக்கும் வகையில் அமைந்துள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸ்ஸநாயக்க தெரிவித்துள்ளார்.
கட்சியின் தலையகத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில், கொரோனா நிலைமை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டிருந்தார்.
இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,
கொரோனா கட்டுப்பாடு தொடர்பான பொறிமுறையில் சுகாதாரத் துறைக்கே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்றாலும், மற்ற தரப்பினருக்கே அரசாங்கம் முன்னுரிமை கொடுப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் கொரோனா கட்டுப்பட்டு செயலணி உடனடியாக மறுசீரமைக்கப்பட வேண்டும் எனவும், நாட்டில் பரவும் கொரோனா தொற்றுக்கு அரசாங்கத்தின் அலட்சியம் மற்றும் தவறான முடிவுகளே காரணம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொருளாதாரத்தை மீட்டுக் கொண்டு மக்களையும் கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொண்டு தாம் பயணிப்பதாக அரசாங்கம் தெரிவிப்பதானது முற்றுமுழுதான பொய் எனவும் ஆதங்கம் வெளியிட்டுள்ளார். உண்மையில் இத்தகைய செயற்பாடுகளினால் பொருளாதாரமும் மீட்சியடையாது, கொரோனா தொற்றும் கட்டுப்பாட்டுக்குள் வராது.
உண்மையில் இவர்களின் பயணமானது மக்களின் வாழ்க்கை மற்றும் பொருளாதாரத்தை அழிக்கும் வகையில் உள்ளது. ஜனாதிபதி அதிகார மமதையிலிருந்து கீழே இறங்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் மக்களின் வாழ்க்கையுடன் விளையாட வேண்டாம் எனவும் குழந்தைகளின் வாழ்க்கையுடன் விளையாட வேண்டாம் எனவும் கடுமையாக தெரிவித்துள்ளார்.
அதேவேளை கர்ப்பிணி தாய்மாரின் வாழ்க்கையுடன் விளையாட வேண்டாம். அரசியல்வாதி என்பதையும் தாண்டி பிரஜைகள் என்ற வகையில் எமக்கு பொறுப்பு இருக்கின்றது. எங்களுக்கு உரிமை இருக்கிறது. இன்றைய நிமைகளுடன் பார்க்கும் போது ராஜபக்ஷ குடும்பத்தினரால் நாட்டை நிர்வாகிக்க முடியாத நிலையே காணப்படுகின்றது எனவும் தெரிவித்துள்ளார்.