மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள் - அரசாங்கத்திடம் விடுக்கப்பட்ட கோரிக்கை
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சுகாதார பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான சகல நடவடிக்கைகளையும் துரிதமாக அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.
கொழும்பு- எதுல்கோட்டையில் அமைந்துள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவிருத்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவித்துள்ளார்,
நாளாந்த சம்பளமாக 1000 ரூபா வழங்கப்படுகிறது என்பதற்காக வழமையை மாற்றி மேலதிக கொடுப்பனவை வழங்காமல் இருக்க முடியாது. கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்துள்ள நிலையில் பெருந்தோட்ட தொழிலாளர்கள் அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலேயே தொழிலுக்குச் செல்கின்றனர்.
எனவே பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சுகாதார பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான சகல நடவடிக்கைகளையும் துரிதமாக அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும். அச்சத்தின் மத்தியிலேயே அந்த மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
இதே போன்று பாடசாலைகள் தொடர்பிலும் அவதானம் செலுத்த வேண்டும். மலையக பல்கலைக்கழகம் தொடர்பில் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டும்.
கொரோனா கட்டுப்படுத்தலுக்காக பெருந்தோட்டங்களில் எந்தவொரு முறையான வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்படவில்லை. நாடாளுமன்றத்திற்குள் நுழையும் போது பாதுகாப்புடன் செல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது என்றார்.