மாகாணசபைத் தேர்தலில் புதிய நடைமுறை
அத்தியாவசிய கடமையில் ஈடுபடுவோர், வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள், வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறும் நோயாளர்களுக்கு தேர்தல் தினத்திற்கு முன்னரே வாக்களிக்கும் உரிமையை பெற்றுக் கொடுப்பது தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
இதற்கான நடைமுறை திட்டத்தை வகுப்பதற்காக நாடாளுமன்ற தேர்தல் தெரிவு குழுவைக் நியமிப்பதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உடன்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், வாக்காளர்கள் தொடர்பில் கவனம் செலுத்தும் பொழுது பெரும்பாலானவர்களுக்கு வாக்களிப்பதற்கான சந்தர்ப்பம் கிடைப்பதில்லை.
விசேடமாக வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கு சட்ட ரீதியில் தேர்தலில் வாக்களிப்பதற்கு சந்தர்ப்பம் கிட்டவில்லை.
இதேபோன்று இலங்கைக்குள் ஊடகவியலாளர்கள், அத்தியாவசிய சேவையில் ஈடுப்பட்டுள்ளோர், சுகாதார பிரிவை சேர்ந்தவர்கள் நாளந்தம் தமது கடமைகளை மேற்கொள்ள வேண்டியிருப்பதால் இவ்வாறானோருக்கு தபால் மூலம் வாக்களிப்பதற்கான சந்தர்ப்பமும் இல்லை.
சிறைச்சாலையில் உள்ளவர்களுக்கும் இதே நிலையே. இதேபோன்று வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுவோர் வாக்களிப்பில் பங்குகொள்ள முடியாத நிலையில் உள்ளனர். தேர்தல் நடக்கும் போது இவர்கள் வாக்களிப்பில் இருந்து விலகியிருக்கின்றனர்.
இவர்களுக்கு வாக்களிப்பு இடம்பெறும் தினத்திற்கு முதல் நாள் வாக்களிப்பதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி கொடுப்பது தொடர்பில் தற்பொழுது கவனம் செலுத்தப்பட்டுள்ளது. வாக்களிப்பதற்காக சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
தற்பொழுது சில திருத்தங்கள் தொடர்பில் நாம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம். தயாரிக்கப்பட்டுள்ள திருத்த சட்டங்களை சட்டமாக்குவதற்காக நாடாளுமன்ற தெரிவுக் குழுவை அமைக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு பிரதமர் உடன்பட்டுள்ளார்.
இந்த தெரிவுக்குழுவின் பணிகள் எதிர்வரும் ஜனவரி மாதம் ஆரம்பமாகும் என்றார்.