அம்பாறை கோர விபத்து : படுகாயமடைந்த இளைஞரும் உயிரிழப்பு
அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை காவல்துறை பிரிவிற்குட்பட்ட மல்வத்தைப் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை (20) மாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் மற்றும் லொறி ஆகியன மோதிய கோர விபத்தில் படுகாயமடைந்து தீவிர சிகிச்சை பெற்று வந்த மற்றைய இளைஞரும் இன்று (22) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதன் மூலம் இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரண்டாக உயர்ந்துள்ளது.
மல்வத்தைப் பகுதியில் பயணித்துக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிளும் லொறியும் நேருக்கு நேர் மோதி இவ்விபத்து ஏற்பட்டிருந்தது. விபத்தில் படுகாயமடைந்த இருவரும் உடனடியாக அம்பாறை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
கவனயீனமான சாரத்தியத்தால் நேர்ந்த விபரீதம்
மல்வத்தை 02, புதுநகர் பகுதியைச் சேர்ந்த இராசேந்திரன் வர்ஷன் (வயது 23) என்ற இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.விபத்தில் படுகாயமடைந்து அம்பாறை மாவட்ட பொது வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த 21 வயதுடைய துஷாந்த் என்ற இளைஞரே இன்று (22) ஞாயிற்றுக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்களின் கவனயீனமான மற்றும் தவறான சாரத்தியத்தினாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |