வடக்கில் ஆரம்பமாகவுள்ள மண்ணெண்ணை விநியோகம்! வாக்குறுதியளித்த கஞ்சன
இரு வாரங்களுக்குள் வடக்கு மாகாணத்துக்கு மண்ணெண்ணெணை விநியோகத்துக்கான ஒழுங்குகளை மேற்கொள்வதாக எரிசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேயசேகர உறுதியளித்துள்ளதாக வடக்கு மாகாண எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் இணையத்தின் தலைவர் ஜெ.ஸ்ரீசங்கர் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாண எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களின் இணையத்துக்கும், கஞ்சன விஜேயசேகரவுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று(28) கொழும்பில் இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பு தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
"இலங்கை அரசாங்கம் வெளிநாடுகளிலிருந்து நேரடியாக எரிபொருளை இறக்குவதற்கான அனுமதியை வழங்குவதற்கு தயாராக இருப்பதாக அறிவித்திருந்தது.
நேரடி எரிபொருள் இறக்குமதி
அதற்கமைவாக, வடக்கு மாகாண எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களின் இணையம், பல்வேறு எரிபொருள் இறக்குமதி நிறுவனங்களுடன் பேச்சு நடத்தி, அதில் ஓரளவு வெற்றியும் கண்டிருந்தது.
இந்தநிலையில் சிறிலங்கா அரசாங்கத்தின் அனுமதியை பெற்றுக்கொள்வதற்காக அமைச்சரை சந்தித்தோம்.
அதற்கு அவரும் இணங்கியுள்ளார். நாம் அவ்வாறு நேரடியாக இறக்குவதற்குரிய ஒழுங்குகளை மேற்கொள்வதற்கான அமைச்சரவை பத்திரத்தை தயார் செய்வதாகவும் கூறியுள்ளார்.
எரிபொருளை நேரடியாக நாம் இறக்கினாலும், எரிபொருளின் விலையில் மாற்றம் செய்ய முடியாது. அரசால் நிர்ணயிக்கும் விலைக்கே விற்பனை செய்ய வேண்டும்.
வடக்கில் மீனவரின் துயரம்
இதேவேளை, வடக்கு மாகாணத்துக்கு மண்ணெண்ணெய் விநியோகம் நீண்டகாலமாக இடம்பெறாமையையும் அமைச்சருக்கு சுட்டிக்காட்டினோம்.
கடற்றொழிலாளர்களும், விவசாயிகளும் இதனால் வாழ்வாதாரத்தை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளதையும் அமைச்சருக்கு விரிவாக எடுத்துரைத்தோம்.
இதையடுத்து, இரு வாரங்களுக்குள் வடக்கு மாகாணத்துக்கு மண்ணெண்ணெய் விநியோகத்திற்கான ஒழுங்குகளை மேற்கொள்வதாக அமைச்சர் உறுதியளித்தார்" என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.