எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலுக்கு எவ்வாறு அனுமதி அளிக்கப்பட்டது? ஸ்ரீலங்கா அரசு தப்பிக்க முடியாது!
எக்பிரஸ் பேர்ள் கப்பல் இலங்கை கடற்பரப்புக்குள் வருவதற்கு எவ்வாறு அனுமதி அளிக்கப்பட்டது உள்ளிட்ட கேள்விகளுக்கு ஸ்ரீலங்கா அரசாங்கம் பதில் வழங்காமல் தப்பிக்க முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
இதனை அரசியலாக்க வேண்டாம் என ஸ்ரீலங்கா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்திருந்தாலும், அரசாங்கத்தின் இயலாமையின் வெளிப்பாடே இந்த சம்பவம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் அண்மையில் தீ பற்றிய எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பிலால் இலங்கையின் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாக சூழலியலாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த நிலையில், தனது முகநூல் பக்கத்தில் காணொளியொன்றை பதிவேற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், சரியான முறையில் விசாரணைகளை நடத்துவதன் மூலம் பல விடயங்களை அறிய முடியும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,
இலங்கை தானாக தேடிக் கொண்ட பிரச்சினையே இது. கட்டார், இந்தியா போன்ற நாடுகள் இந்த கப்பலில் உள்ள நச்சுத்தன்மையான பதார்த்தங்கள் காரணமாக தமது எல்லைக்குள் அனுமதிக்காத போதிலும், இலங்கை அதிகாரிகள் இக்கப்பல் எமது கடற்பரப்பில் நுழைய அனுமதியளித்துள்ளனர்.
இந்த கப்பலில் உள்ள விடயங்கள் தொடர்பாக அறிந்திருக்கவில்லையா அல்லது அறியாமல் அனுமதியளித்திருக்க முடியுமா? இவ்வாறான கேள்விகளுக்கு பதில் வழங்காது ஸ்ரீலங்கா அரசாங்கத்தால் தப்பிக்க முடியாது. இதனை அரசியலாக்க வேண்டாம் என ஜனாதிபதி கூறுகிறார். ஆனால் அரசாங்கத்தின் இயலாமையே இதன் மூலம் வெளிப்படுகின்றது.
துறைக்கு பொறுப்பான அமைச்சர்கள் மெளனமாக இருக்கின்றனர். அரசாங்கம் இக்கப்பலின் எச்சங்களை ஆழ்கடல் நோக்கி கொண்டு செல்ல முனைந்தது இதுவும், சர்வதேச நீர் எல்லைகள் தொடர்பான ஒரு எல்லை மீறலாகவே காணப்படுகின்றது.
ஏனெனில் சர்வதேச கடல் எல்லை தொடர்பான சட்டங்களுக்கு பொறுப்புகூற வேண்டியவர்களாக நாம் இருக்கின்றோம். கடல் மாசு தொடர்பான எமது நாட்டின் சட்ட திட்டங்களும் காணப்படுகின்றன. நாட்டு மக்கள் ஏற்கனவே கொவிட் காரணமாக பாரிய பொருளாதார சிக்கலை எதிர்நோக்கியுள்ளனர்.
இந்த காலகட்டத்தில், இவ்விபத்து மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் பாதித்துள்ளது. மக்கள் மீனை உட்கொள்ள தயங்கும் நிலைமை உருவாகியுள்ளது. கடல் வளம் பெருமளவில் பாதிக்கப்பட்டு பார தூரமான அழிவுக்கு இட்டுச்செல்லும் நிலைமையில் இலங்கை பிரஜைகளுக்கு பதில் கூற கடமைப்பட்டுள்ள அரசாங்கம் மௌனமாக இருக்கின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.