இலங்கையில் உண்மையைப் பேசும் அனைவரும் குற்றவியல் விசாரணைக்கு அழைக்கப்படுவார்கள்- கடுமையாக சாடும் எம்.பி!
இலங்கையில் உண்மையைப் பேசும் அனைவரும் குற்றவியல் விசாரணைக்கு அழைக்கப்படுவார்கள் என்பது தெளிவாகியிருப்பதாக, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.சி.அலவத்துவல தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவலின் முதலாவது அரைத் தாக்கத்தை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்களிப்பை வழங்கியிருந்த வைத்திய நிபுணர் ஜயருவன் பண்டார, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளமை குறித்து கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து ஜே.சி.அலவத்துவல தமது எதிர்ப்பை பதிவுசெய்துள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதில் உள்ள குறைபாடுகள் தொடர்பில் வைத்திய நிபுணர்கள் பலரும் கருத்து வெளியிடுகின்றனர். அதேபோன்று பொதுமக்கள் மீதான அக்கறையின் அடிப்படையில் ஜயருவன் பண்டாரவினால் வெளியிடப்பட்ட கருத்திற்காக அவர; குற்றவிசாரணைப் பிரிவிற்கு அழைக்கப்பட்டுள்ளார்.
நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் முதலாவது அலையின் போது அதனைக் கட்டுப்படுத்துவதில் வைத்தியநிபுணர் ஜயருவன் பண்டார முக்கிய பங்களிப்பினை வழங்கியிருந்தார். கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதில் உள்ள குறைபாடுகள் மற்றும் அதனால் பொதுமக்கள் உயிரிழக்கின்றமை தொடர்பில் வைத்திய நிபுணர்கள் பலரும் கருத்து வெளியிட்டார்கள்.
அதேபோன்று தான் ஜயருவன் பண்டாரவும் அவரறிந்த தகவல்களை அடிப்படையாகக்கொண்டு கொவிட் - 19 தொற்று ஏற்பட்டிருப்பதை உறுதி செய்வதற்கான பரிசோதனைக்கு பெருமளவான கட்டணம் செலுத்தவேண்டியுள்ளமை தொடர்பில் கருத்து வெளியிட்டார்.
அதற்காக அவரைக் குற்ற விசாரணைப் பிரிவிற்கு அழைப்பதன் மூலம், உண்மையைப்பேசும் அனைவரும் குற்றவிசாரணைப் பிரிவிற்கு அழைக்கப்படுகின்றார்கள் என்பது தெளிவாகியிருக்கின்றது எனவும் தெரிவித்தார்.